Friday, August 31, 2007

அரவிந்தன் என்ற அரவிந்து

திலகம் எங்கயடி முத்தத்தில நின்ட நாய்க்குட்டியள் ஒண்டையும் காணேல்ல.தாய் நாய் அந்தரப்படுது?..அம்மம்மாவின் சத்தம் குசினி மட்டும் கேட்டது.நாய் ஜன்னலுக்கு கிட்ட வருவதும் மூக்கை காற்றில் உயர்த்தி காற்றை உறிஞ்சுவதுமாக நின்றது.அது ஓடியபோது கனத்து நின்ற அதன் முலைகள் இடமும் வலமும் அசைந்தாடின.மூலைக்கிணற்றில் தொபுக் என்று எதோ விழுந்த சத்தம் கேட்டு சாப்பிட்டு விட்டு அம்மாவுக்குத்தெரியாமல் வெய்யிலுக்க் தும்பி பிடித்துக்கொண்டிருந்த பாபு பிடிச்சதும்பிகளையும் விட்டு விட்டு கிணற்றைப்பார்க்க ஓடினான்.வாழைச்சருகை பிய்த்துக்கொண்டு ஒடிப்போய் கால்நுனிகளை ஊன்றிக்கொண்டு கிணற்றுக்குள் பார்த்தான்.சேட்போடாத மேலெல்லாம் மண்ணும் வாழைத்தும்பும் ஒட்டியிருந்தது.கிணற்றுக்குள்மூன்றுநாய்க்குட்டிகள் துடித்துக்கொண்டிருந்தன.

பெரியண்ணா நாலாவது குட்டியை இரண்டுவிரலால் தூக்கி அதன் முகத்தை உற்றுப்பார்த்தான்.அது கொஞ்சம் குண்டு நாய்க்குட்டி.வாலை காலுக்குள் இடுக்கி க்கும் க்கும் என்று அனுங்கிவாறு கண்ணை மூடித்திறந்தது.பெரியண்ணா தாங்கோ நான் போடுறன் என்றான் பாபு.துடித்துக்கொண்டிருந்த மூன்று குட்டிகளுக்கு மேல் போய் விழுந்தது குண்டு நாய்க்குட்டி.அந்த ஒன்றையாவது பாபுவால் காப்பாத்த முடியவில்லை.பெரியண்ணா துடித்துக்கொண்டிருந்த நாய்க்குட்டிகளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.பாபு எட்டிப்போய் கிணற்றுக்குள் துப்பி எச்சில் நாய்க்குட்டிகள் மேல் விழுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். அம்மம்மாவின் குரல் குசினிக்குள்கேட்டது.

எடியேய் திலகம்! இவன் நாய்க்குட்டியள கிணத்துக்க போடுறான் போல கிடக்கு பாரடி.இவனுக்கு பாவமெல்லே கிடைக்கப்போகுது.
தம்பி டேய்! அரவிந்து.நாய்குட்டியள் பாவமடாதம்பிகிணத்துக்க போடாத..


செத்துக்கொண்டிருந்த நாய்க்குட்டிகளையே இமைக்காமல் பார்தக்கொண்டிருந்தான் பெரியண்ணா.அரவிந்தண்ணா ஏன் நாய்குட்டியள கிணத்துக்க போட்டனீங்கள் ? பாபு மெதுவாகக்கேட்டான்.
பெரியண்ணாவுக்கு இருபது வயது.பாபுவின் அம்மா இல்லா நேரங்களில் றெஜீனாமாமிசொல்லுவா
"அவன் கொஞ்சம் மூளவளர்ச்சி குறைஞ்ச பிள்ளதானே.."
நிச்சயமாக இது பாபுவின்அம்மாவின் காதுகளில் விளாது என்று தெரிந்த பிறகுதான் மாமியின் வாய்திறக்கும்.
பாபு பிறக்கமுதல் அவன் அம்மாதான் பெரியண்ணாவைவளர்த்தவ.அம்மாவின் காதுக்கு இது கேட்டால் அவள் சும்மா இருக்கமாட்டா என்று பாபுவுக்குத்தெரியும்.இவற்றையெல்லாம் வாய்திறவாமல் கேட்டுக்கொண்டிருப்பான்..சில நேரங்களில பெரியண்ணா அவனைக்கட்டிப்பிடித்துக் கொஞ்சுவான்.

"பெரியண்ணா சீ உங்கட எச்சில் மணக்குது சென்ற் அடிச்சு விடு".இரண்டுகையாலும் கன்னத்தை மாறிமாறித்துடைத்துக்கொள்வான் பாபு.பெரியண்ணாவுக்கு உள்ளங்கைகள் இரண்டும் பெரியவை.மென்மையானவை.பாபு அவற்றை தடவிப்பார்த்துக்கொள்வான்.பெரியண்ணாவின் முதுகில் கொப்பளம் கொப்பளமாக காய்கள் இருக்கும்.அவனது உள்ளங்கைகளைப்போலவே அந்தக்காய்களும் தொடுவதற்கு மென்மையானவை அழுத்தமில்லாதவை.

ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியண்ணா வீடியோப்படங்களுடன் வருவான். சண்டைப்படங்களில் அவனுக்கு ஒரே மோகம்.ஒவ்வொரு சண்டைக்கும் "பாபு பார்த்தியே பாபு பார்த்தியே" பெரியண்ணாவின் குரல் இடைக்கிடை உசுப்பிக்கொண்டிருக்கும்.பாபு ரீவியையும் பெரியண்ணாவையும் மாறிமாறிப்பார்த்துக்கொண்டிருப்பான்.தீபாவளி பொங்கல்நேரங்களில் பாபுவும் பெரியண்ணாவும் சைக்கிள் வால்வுக்கட்டைகளில் வெடிசெய்வார்கள்.

இரபது வயதுப்பெரியண்ணாவும் பாபுவும் பெரியப்பா வரும்போது அவர் திடுக்கிடும் படி எப்படி வெடிஅடிப்பது என்று தீவிரமாகத்திட்டமிடுவார்கள்.பெரியண்ணாவின் எல்லாத்திட்டங்களும் கடைசிநேரம் மட்டும் நன்றாகவே வேலைசெய்தாலும் பெரியப்பாவின் கைகளால் கிடைக்கும் மாட்டு அடிகளுடனேயே அவை முடிவடைந்திருக்கின்றன..பாபு பெரியப்பாவின் பின்னால் ஒளித்துக்கொள்வான். பெரியண்ணா தோள்களுக்குள் ஒடுங்கிய தலையுடன் பரிதாபமா முணுமுணுப்பான்.பாபுவுக்கு அவனை தடவிக்கொடுக்கவேண்டும் போல் இருக்கும்.

ஆனால் பெரியப்பா கோபித்துக்கொண்டால்?
பெரியப்பா அங்கால போனதும் மெதுவாக பெரியண்ணாவின் கால்களைக் கட்டிக்கொள்வான்.அதிலேயே அவனது வலிஎல்லாம் சரியாகப்போகும் எனபது பாபுவின் எண்ணம். பெரியண்ணா கண்களில்இருந்து வழியும் கண்ணீரைத்துடைத்தபடி அம்மாவுக்கு இதைப்பற்றி புகார்சொல்ல மெதுவாக குசினிக்கு நடப்பான்.அவனது முதுகில் ஐந்தாறு கையின் அடையாளங்களாவது சிவப்பாக பதிந்திருக்கும்.

அன்று சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவு.பாபு விடியவே பெரியம்மாவீட்ட வந்துவிட்டான்.அங்க ஏற்கனவே சனமாக இருந்தது.சீலா மச்சாள் வந்திருந்தாள்.சீலா நல்ல வெள்ளை நிறம்.அவளைக்கிள்ளிப்பாரக்க வேண்டும் என்று பாபுவுக்கு நெடுக ஆசை.கொடுப்புக்குள் இருக்கும் தெற்றுப்பல்லு அவள் சிரிக்கும் போது மின்னி மறையும். விதம் விதமாக அழகாக உடுப்பு போடுவாள்.அவள் வந்து விட்டால் பெரியண்ணா பெரியமனுசனாகிவிடுவான். பாபுவைக்கண்டுகொள்ள மாட்டான்.

பாபு ஜன்னலில் ஏறிஇருந்து கொண்டு பால்குடித்தபடி ஒவ்வொருவரின் வாயையும் பார்த்துக்கொண்டிருந்தான்.சீலா சிரித்துச்சிரித்து பெரியம்மாவுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.பெரியண்ணா அவளுக்கு படம்போட்டுக்காட்டுவதற்காக ரீவியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்.

"தம்பி டேய' "

பெரியப்பாவின் குரல் பாத்ரூமிலிருந்து கேட்டது.பெரியம்மாவுக்குத்தெரியாமல் ஜன்னலுக்கு கீழே நின்ற எறும்புகளுக்கெல்லாம் பால் ஊற்றிக்கொண்டிருந்த பாபு திடுக்கிட்டுப்போனான்.தடக்குத் தடக்கென்று பெரியப்பா நடந்து வரும் சத்தம் கேட்டது.

"டேய் தம்பி கக்கூசுக்குப்போனாத் வடிவாத் தண்ணி ஊத்துறேல்யாடா? "
புளுத்த நாத்தம் நாறுது.மூதேசி உனக்கு எத்தின தரம் சொல்லுறது. உள்ளுக்க போகேலாமக் கிடக்கு"


பெரியண்ணா கூசிப்போனவனாய் நிமிர்நதான்;.சீலா மச்சாள் சிரித்துக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
சீலா எப்ப வந்தனி? .பெரியப்பா சீலாவுடன் கதைக்கத்தொடங்கினார்.பெரியண்ணா கையிலிருந்த படக்கொப்பியை புரட்டிப்பார்த்தான்.என்ன செய்யவேண்டுமென்பதை மறந்து விட்டவன் போல கையைத்தொங்கப்போட்டுக்கொண்டான்.

"டேய்"

-பெரியப்பா மறுபடியும் திரும்பினார்.பெரியண்ணா சாறத்தை மடித்துக்கட்டிக்கொண்டு பாத்ரூமைநோக்கி நடந்தான்.
"சீலா போகேக்க கற்பூரவள்ளி இலபுடுங்கித்தாறன்.அம்மாட்டக்குடுத்துவிடு.சூட்டுக்கு நல்லது.நீயும் விடியஎழும்பினவுடன தண்ணிகுடியடியப்பா.பிறகு பார்.."

பெரியப்பா தொடர்ந்துகொண்டிருந்தார்.
யாழ்பாபணத்தில் கரண்டில்லாத காலம் அது.தண்ணித்தொட்டிக்கெல்லாம் குழாய்கிணத்தில இருந்துதான் தண்ணிநிரப்பவேணும்.பெரியண்ணா இரைக்கஇரைக்க கிணத்திலதண்ணயடிப்பான்.பெரியப்பா குளிப்பார்.பெரியப்பாவின் மயிரடர்ந்த பெரிய கருப்பு முதுகு வெளிச்சத்தில் மினுங்கும்.பரபரவென்று சவர்க்காரம் தேய்த்துக்கொள்வார்.கால்நிகமெல்லாம் துப்பரவாக இருக்கவேண்டும் அவருக்கு.ஆறுதலாக அழுக்குத்தேய்துக்குளிக்க சூரியன் நடுவானத்துக்கு வந்து விடும்.பெரியண்ணா பின்னுக்கு கால்களை வளைத்துக்கொண்டு இடைக்கிடை ஓய்வெடுப்பான்.பிறகு பெரியப்பா சாப்பிடப்போய்விடுவார்.
"பாபு பார்த்தியே!அந்த முளியன் ஒருநாளும் தண்ணியடிச்சு விடமாட்டான்.இவர் பேயர் அவனைஒண்டும்சொல்ல மாட்டார்.இவர் பயமடா அவனுக்கு."
பெரியண்ணா கிசுகிசுப்பான்.அவன் முளியன் என்டு அன்பாகச்சொல்வது பெரியப்பாவின் இரண்டாவது மகன் கண்ணனைத்தான்.பெரியண்ணாவின் கோபத்திற்கு காரணம் இல்லாமலில்லை.முளியன் என்ற கண்ணன் நன்றாகப்படிப்பான்.தேவையில்லாமல் மற்றவருடன் கதைவைத்துக்கொள்ள மாட்டான்.பெரியப்பா அவனை வேலை ஒன்றும் செய்யச்சொல்லுவதில்லை.அவனை அதட்டிக்கூட பாபு பார்த்ததில்லை.பெரிண்ணாவுக்கு அவனிடம் பெறாமைதான்.அனால் கோபமில்லை.பெரியண்ணாவின் விளையாட்டுக்கள் எல்லை தாண்டும்போது அண்ணா என்ற கண்ணனின் அதட்டும்குரல் ஒன்றே அவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்..பெரியண்ணா அத்துடன் அடங்கிவிடுவான்.

எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது.திடீரென்று பெரியண்ணாவைக்காணவில்லை.
காணவில்லையென்றால் காணவில்லை.

ஊரெல்லாம் பச்சை சீருடை அணிந்தவர்கள் காவலுக்கு நின்றும் பெரியண்ணாவைக்காணவில்லை.பண்ணைக்கடற்கரையோரமாக மெல்லெனத்தவள்ந்து வந்த ஈரலிப்பான பருவப்பெயர்ச்சிக்காற்றுடன் கலந்து மறைந்து விட்டான் பெரியண்ணா.அப்பா எங்கெல்லாமோ ஒடினார்.பாபுவுக்கு முதல் ஒன்றும் தெரிய வில்லை.அப்பாவுடன் சேர்ந்து சைக்கிளில் சவாரிவிட்டான்.

"எப்ப நடந்தது "

அடங்கிப்போனவராய்க்கேட்டார் அப்பா.

"மத்தியானம் சாப்பாடெடுக்க வந்தவன்.ஆரிய குளத்தடியில வைச்சுப்புடிச்சிருக்கிறாங்கள் - நாளைக்கு பின்னேரம் மட்டும் பார்ப்பம்.இவனப்புடிச்சு என்ன செய்யப்போறாங்கள் போசு!!-அப்பாவையே உற்றுப்பார்த்துக்கொண்டு சொன்னார் பெரியப்பா.

அடுத்தநாள் வந்தது.அதற்கு அடுத்தநாளும் வந்தது. அடுத்த மாதமும் வந்தது.முகில் கறுத்து மழைபெய்தது.வயிற்றுக்காற்றையெல்லாம் வாயால் ஊதித்தள்ளும் அளவுக்கு வியர்த்துவடியும் கோடைக்காலம் வந்துபோனது. .பல்கிடுகிடுக்க மாசிப்பனி பொழிந்து தள்ளியது.இப்பொழுதும் முற்றத்து மாமரத்தில் இரட்டைவால்குருவி விடியற்காலத்தில் பாடும் சலசலப்புக்கேட்கிறது.எல்லாம் அந்தந்த இயல்பில் வழுவாமல் நடந்து கொண்டுதான் இருந்தது.பெரியண்ணா மட்டும் வரவில்லை.
டேய்தம்பி என்று கூப்பிட்டு பழகிய குரலுக்கு மற்றப்பெயர்கள் இணங்கவில்லை.தனக்கு நெருக்கமான அந்த பெயருக்குரியவன் இப்போது இல்லை என்று உணர்ந்துகொள்ள பெரியப்பாவுக்கு கொஞ்சக்காலம் பிடித்தது.

காருக்குள் நசுங்கியும் கடுவன்நாய்களிட்ட கடிவேண்டியும் நாய்க்குட்டிகள் தொலைந்துபோயின.பாபு பெரியம்மாவீட்டுக்கு போனால் தென்னம் மரங்களுக்கு கீழ்திரிந்துகொண்டிருப்பான்;.இடக்கிடை போய்கிணற்றை எட்டிப்பார்பான்.அவனுடையதும் பெரியண்ணாவினதும் சொத்துகளான வால்வுக்கட்டை வெடிகள் கவனிப்பாரற்று கிடந்தன.பெரியப்பா இரைக்க இரைக்க குழாய்கிணற்றில் தண்ணியிறைப்பார்.


ஒருகிழமை லீவில் கொழும்பிலிருந்து யாழ்பாணம் வந்திருந்தான் பாபு.பெரியம்மா வீடு வெளிக்கு அப்படியே தான் இருந்தது.அவ்வளவு பெரிய வீட்டில் பெரியம்மா மட்டும் குசினிக்குள்ஏதோ செய்து கொண்டிருந்தா.திரும்பும் போது பெரியம்மாவின் குரல் கேட்டது.தம்பி உந்த நாபிடிகாரர் வந்தா.உந்த குட்ட நாயைப்புடிச்சுக்குடுத்துவிடடா.பெரிய உபத்திரவமாக்கிடக்கு.பாபு ஒன்றும் சொல்லவில்லை. மெதுவாக நகர்ந்தான்.பெரியண்ணாவுக்கு பிடித்தமான வேலைகள் இவை...முற்றத்து விளாட்மரத்துக்குகீழே குருவிக்கூடென்று விழுந்து காற்றில் அலைந்தது.பாபுவுக்கு அழவேண்டும்போல் இருந்தது.

-சேரன் கிருஷ்ணமூர்த்தி

எனக்குப்பிடித்த கவிஞர் திருக்குமரனின் கவிதைத்தெகுப்பிலிருந்து மனதை உருக்கிய ஒரு கவிதை ஒத்திசைவாக


உனக்காகச்சாப்பிட்டு
உனக்காக முலைபெருத்து
உனக்காக உடையவனை
ஒதுக்கிவிட்டுச் சிலநேரம்
தனக்கான விருப்பங்கள்
தவிர்த்திருந்து கண்விழித்து
உட்பசலை படர்ந்திருப்பாள்

எண்ணெய்க்குள் தோய்த்தெடுத்து
இழுத்திழுத்துப் பிடித்துவைத்த
சின்னக் கூர்மூக்கு
சிரட்டைபோல் உருண்டதலை
அசையிலே அவள் நுள்ளும்
சதைபிடித்த பின்பக்கம்
கூசி நீ சிரக்க விரல்தடவும்கீழ் வயிறு

அடையாளம் தெரியாமல்
நீ புதைந்து போயிருக்க
கடைவாயில் பூவரசு
வைரவரில் பூவைத்து
உன்னை எதிர்பார்த்தபடி
உயிர்பிடித்துக்காத்திருப்பாள்
-நன்றி திருக்குமரன் கவிதைகள்

Sunday, August 12, 2007

பின்னிரவின் தூய்மை கலைக்கும்

பின்னிரவின் தூய்மை கலைக்கும்
பழுப்பு இலைகளின்- உதிர்வு
சில நிமிடம் வாங்கி
மீண்டும் உதிரும்,
கறுப்பில் தொலைந்துபோகும்-அவற்றின்
அவசர..இலைக்காம்புகளின்
பிடிப்பு விலகும் சத்தம்
ஒலிக்கீறலாய் இதயம் துளைக்கிறது.

அசைவுகள் ஓய்ந்த உலகத்தின்
பெருமூச்சில் நடுங்கியபடி
பூமி நொக்கி ஒரு சின்னப்பயணம்
முகில் விலகிய

ஒரு சில நிமிடங்களில்
தங்கமாய் தகதகக்கும்
பழுப்பு இலைகள்
நிலவைப்பழிக்கும்.

பூட்டிய ஜன்னல்களின் பின்னே
உடல்தளர்ந்து நரம்புகள்விளிம்பில்
வேர்வைதுளிகளின்,
கோலங்களுடன் நான்மட்டும் தனியாக

காதோரம் உனக்கொரு கவிதைசொல்லவா நண்பா
























வயலும் வரப்பும்
வகிடெடுத்து விரியும்-
வல்லை நிலத்தின்
எல்லை வெளிக்குள்
அமிளும் சூரியன்
எமக்கு மட்டும்

மண்சட்டியில் குத்தரிசிப்
பழஞ்சோறு-காலையில்
நிலங்களின் தலைகோதும்
சுதேசித் தமிழ் உழவனின்
உல்லாசப் புலம்பல்கள்
வியர்வை தளுவிக்கொண்டு.
நாற்றுவேர்களுக்கு காற்று
படுகிறது.
ஈரச்செம்புலம்... கால்பட
மேல் சிலிர்க்கிறது.


ஞாயிறு விடியல்
பளுப்புவெள்ளை
முத்தத்துப் பனங்கள்ளு
கூடிக்குமிந்து நிற்கும்
கொய்யாமரத்துநிழல்
கொஞ்சங் காரமாக
பங்குக்கிடாயிறைச்சி
முத்தத்துக் கொட்டுமண்
விளக்குமாற்றின் வரித்தடங்கள்
தொன்னைகள் கூடத்தோரணம்காட்டும்-இந்த
”அழகுசொல்லமுடியவில்லை”


கைகூவின் கருத்தேயறியாது…
கூத்துக்கூத்தென்று நாமும் கலைவளர்த்தோம்
எங்களுக்குள்ளும் கவிதைகள் வாழ்ந்தன.

எங்களோடு எங்களாய்
நாமே கவிதைகளாய்..


கதியால் சண்டைகளுடனும்
கவுண்ட மணியின் கதைகளுடனும்
காலம்கழிக்கும் மண்ணின் மூத்த
குடிகள்..
இன்றோ,
மட்கிப்போயிற்று எங்கள் கனவுக்காலம்
இன்னமும் கூட
எங்களுக்குள் உறங்கிப்போன
பணடைய தமிழனின்
எச்சங்களின் வாசத்தை
நான்- சிலநேரம்
கனவுகளில் உணர்ந்துகொள்கிறேன்

இலங்கையன் என்ற
இலக்கணம் துறந்து
தமிழனாய்த் தலைகுனியும்
சிலநேரம்
வேலிக்கதியால் முட்களுக் கிடையே
தொலைந்துபோன
இலங்கையனை..
கண்கள் தேடிக்கொண்டேயிருக்கிறது.
நண்பா
சிவப்பான உனது கண்கள்
கனவிலும் உன்னை வெறிக்கும்.
பல்கடிக்கும் சத்தமோ
எனக்குப் பயமாக உணர்கிறேன்.
நண்பா..
உனக்குத் தெரியுமா
உனக்குள் உறைந்து போனவை
உனக்குத் தெரியுமா
உனக்குள் மறக்கடிக்கப்பட்டவை
முற்றுத்து மல்லிகையின்
சின்ன வெள்ளைப்பூக்குளுக்குள்
வாசமொன்று கசியுமே
கொஞ்சம் ஈரலிப்பாக.
விரித்துக்கூடப்பார்க்காத
கவிதைப்புத்தகங்களின்
பேனாமை வாசங்கள்
மூச்சிளுக்கும் ஒவ்வொரு
தரமும் - மூளைசிலிர்க்கும்
உன்..
கண்கள் சொருகும்
இமைகள் திறவாதே.
கண்ணீர்த் துளிகள்
கதவுடைக்கும் நானறிவேன்.
நண்பா
நீ கொஞ்சம் நீயாகும் போது
நான்.
காதோரம் கொஞ்சம் கவிதை சொல்லவா??

Friday, August 10, 2007

தினம் தினம் புதிதாய்


இன்றைக்கு வெள்ளிக்கிழமை.நாளைக்கு வேலையில்லையென்றுநினைக்கும் போதே சந்தோஷம் பொங்கியது.அந்த சந்தோஷத்துடனே காலமைவிடிய பக்கத்தில் இருக்கிற கிரவுண்டில் ஓடவேளிக்கிட்டேன்.மெல்லிய ஈரக்காற்றில்இ விடிந்தும் விடியாத நேரத்தில் யாருமில்லாத வெளியில் ஓடுவதே தனிஇன்பம்.இந்த உலகத்தில் இருப்பவர்களுக்குச் சம்பந்தமில்லாத இடத்திலஇ; எனக்குமட்டும் சொந்தமான இடத்தில் தனியனாக கட்டற்று இருக்கும் ஒரு உணர்வு ஒருபுதுஉற்சாகம் பொங்கிவரும்.ஓடிக்களைத்த பிறகு இரைக்க இரைக்க வியர்வை காயும்வரைக்கும்; புல்தரையில் படுத்துக்கொண்டு கண்டதையும் நினைத்துக்கொண்டிருப்பேன்.சோம்பல் கலைந்து தகதகக்கும்சூரியவெளிச்சத்தில் பச்சைப்புல்தரைகளில் வந்து குதிக்கும் மைனாக்களையும் புறாக்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுசிகரட்புகைப்பதைப்போல் சந்தோஷம் இந்த உலக்த்தில் இல்லையென்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

விடியற்காலை.. விடிந்தும் விடியாத இளங்காலைப் பருவம் என்னுடைய சின்ன வயது முதலே என்னுள் பதிந்து விட்ட ஒன்று.என்னுடைய சந்தோஷமான தருணங்கள் எல்லாமே பெரும்பாலும் அதிகாலையிலேயே நடந்திருக்கிறது.கொளும்பில் எங்கு வீடுமாறினாலும்; எனக்கு ஒரு புல்வெளி கிடைத்துவிடும்.புல்வெளிகளைக் கண்டவுடனே உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் தும்பிகளைக்கலைத்த பத்துவயதுச்சிறுவனுக்கு இருப்புக்கொள்வதில்லை.அங்கு செய்தது போல் புல்வெளிகளில் தும்பி பிடிக்க இப்பொளுது அவனுக்கு முடிவதில்லை.புல்லில் படுத்துக்கொண்டு தும்பிகளையும் பறவைகளையும்;பார்பதில் அந்த சந்தோஷம் அவனுக்கு கிடைத்துவிடுகிறது.
தூரத்தில் புத்தவிகாரத்தில் இருந்து பெண்கள் வந்துகொண்டிருந்தார்கள்.எல்லாரும் வெள்ளை நிற ஆடைகளில் மெதுவாகஇநிதானமாக வெளிவரும் பெண்கள். புத்தகோயில்களின் அருளையெல்லாம் தங்களுடன் எடுத்துச்செல்வது போல ஓளிரும்முகங்களுடன் தங்களுக்குள் பேசிக்கொண்டு கிரவுண்டை கடந்து போனார்கள்.கோபுரங்களில் இருந்து வெள்;ளைப்புறாக்கள் சிறகடித்துப்போனது போல ஈர்க்கும் தடயங்களை தங்களின் பாதைகளின் பின்னேவிட்டுக்கொண்டு அவர்கள்போனபிறகும் மங்கல் வெள்ளை ஒளியொன்று பாதையில் கசிவதுபோல பிரமை.புல்லிலிருந்து தலையை நிமிர்த்திப்பார்த்துக்கொண்டிருந்ததில் கழுத்தில் நோகிறது.பெண்களைப்பார்த்துக்கொண்டிருப்பதில்தான் என்ன சந்தோஷம் பேசவேண்டாம் சிரிக்கவேண்டாம்.வெறுமனே பார்துக்கொண்டிருந்தாலே போதும் சந்தோஷமும் உற்சாகமும் தானே வந்துவிடும்கிரவுண்டில் இன்னும் நாலுதரம் சுற்றிஓடலாம்போல…என்ன இருக்கிறதோ தெரியவில்லை பெண்களிடம்.

என்னுடைய உலகம்கூட பெண்கள் சூழ்ந்த உலகம். வீட்டிலேயே நான்கு பெண்கள் அம்மம்மாவையும் சேர்த்து.அப்பாவுக்குப்பிறகு நான்மட்டுமே வீட்டுக்கு வீரமான ஆண்மகன்..நால்வரின் விதம்விதமான அன்பையும் நான்மட்டுமே சுமக்கமுடியாமல் சுமந்து வளர்ந்தேன்.அவர்களை அதிகாரம் செய்வதிலேயே என் நாட்களைக்கழிந்திருக்கின்றன..நான் பாடசாலைக்கு கிளம்புமுன் எல்லாரும் களைத்துசோர்ந்து விடுவார்கள்.ஆட்டிவைத்துவிடுவேன். எனது சத்தம் றோட்டுவரைக்கும் கேட்கும்எனது சின்னத்தங்கச்சி கூட நான்கத்துவதைப்பார்த்துசிரித்துக்கொண்டு எனது சப்பாத்தை துடைப்பது ஞாபகம் வருகிறது,.அப்படி அன்பார்ந் அதிகாரங்கள்சிலநேரங்களில் இப்போளுதும் வேண்டியிருக்கிறது.ஆபத்தற்றஇஅன்பானவர்களிடம் மட்டுமே காட்டக்கூடிய அதிகாரங்கள்.கொளும்பில் எங்கு போய்க்காட்டுவது… பெண்கள் இல்லாத உலகத்தை கற்கனைசெய்யவே கசக்கிறது.

கழுத்தில் ஒட்டிக்கொண்டிருந்த புல்லின் மிச்சங்களையும் பனிநீரின் கசிவையும் உள்ளங்கையால் தேய்த்து பரப்பிக்கொண்டேன் குளித்துவிட்டு அயன் பண்ணிஇன்னமும் சூடாகவே இருந்த உடைகளை போட்டுக்கொண்டு கோல்றோட்டை நோக்கி நடந்தேன்.ஆழ்ந்து மூச்சிழுத்து விடும் ஒவ்வொருதரமும் ஏழு மணிவெயிலுடன் கலந்த குளிர் காற்று நுரையீரலை நிரப்புகிறது.

இன்னும் கொஞ்சம் ஆவ்ரஷேவ் அடித்திருக்கலாம்…

றோட்டின் இரண்டு பக்கங்களிலும் அறிமுகமில்லாத மனிதர்கள் கடந்து போகிறார்கள்.விரைவாகஇ செல்போனுடன் போர்சை துளாவிக்கொண்டு உடைகளைசரிசெய்துகொண்டு பயணப்படும் மனிதர்கள்.ஒவ்வொருவராக கடந்து செல்லும் போதும் அவர்களின்மனதைப் படிக்கமுனைவது போல அவர்களின் முகங்களை மெதுவாக பார்க்கிறேன்.எனது நடப்பு அவர்களில் ஏதும் மாற்றத்தை காட்டுகிறதா என்று அவர்களின் முகக்குறிகளை தெரிந்துகொள்ள முனைகிறேன்.இயற்கையும் மனிதர்களும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டவர்ளை போல அமைதியான காலைநேரத்தில் சப்தமில்லாமல் ஒருவரையொருவர் கடந்து செல்லும் மனிதர்கள்.தொலைவில் திருட்டுத்தனமாக ஒருவரையொருவர் நோட்டமிட்டுக்கொண்டும் அருகில் வரும்போது தலையைக்குனிந்கொண்டும் முகத்தை செயற்கையாக இறுக்கிக்கொண்டும் கடந்துசெல்லும் மனிதர்கள்.என்ன இருந்தாலும் கலைநேரம் குளித்து சுத்தமான உடையில் செல்லும் சகமனிதர்களை பார்க்கும்போதுவரும் இயல்பான உற்சாகத்தில் இந்த வெறுமையை ஒளித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

கணபதியின் கடையில் சாப்பிடும் போது கணபதி எதோ புதுப்படத்தைபற்றி சொல்pக்கொண்டிருந்தான்.மாத்தையா..சொதிகொஞ்சம் போடவா.? கேட்டுக்கொண்டே சொதியை விடடான். அவன் பதிலை எதிர்பார்ப்பதில்லை.என்னுடைய யூகம்அது.அவன்கேட்டு வாய்மூடமுன்னம் இலையில் கவிழ்ந்து படுத்தால்தான் அவன்சொதிவிடுவதை தடுக்கமுடியம்.சொதிக்குள்ளே மூழ்கித்தொலைந்து போய்விட்ட இடியப்பத்தை துழாவிக்கொண்டு கணபதிசெல்வதை கேட்டுக்கொண்டிந்தேன்அவனுக்கும் என்னுடையவயதுதான்.இருபத்தொன்று.எஸ்டே;காரன்.கணபதி ஏதோ சொல்லிவிட்டு சிரித்தக்கொண்டு என்னைப்பார்தான்.பதிலையோ சிரிப்பையோ எதிர்பார்த்த முகத்துடன்.என்னுடைய சிந்தனை ஏழு நதிகள் ஏழு மலைகள் ஏழுகடல்கள் தாண்டி துருக்கி ராஜகுமாரியின் கால்சலங்கைகளை நோண்டிக்கொண்டிருந்தது.மெதுவாக சாப்பிட்டு விட்டு எழுந்தேன்.நான் ரிப்சுக்கு வைத்த காசையே கணபதி உத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.முகம் தொங்கிப்போய் இருந்தது.புறாக்களும் தும்பிகளும் பறந்து போன காய்ந்த புல்வெளிமாதிரி அவனது முகம் மங்கிப்போய்த்தெரிந்தது.ஒரு வேளை கணபதி நான் எதாவது சொல்லுவேன் என்று எதிர்பார்த்தானோ…

“மண்ணிறமான பட்டமரம்!
நிறமிழக்கத்தொடங்குறது…
பச்சை ஓணான்”
சம்பந்தமேயில்லாமல் ஒருஹைக்கூ மின்னலடித்து மறைந்துபோனது எனக்கு.

எனக்கு முன் அந்தப்பெண் மும்முரமாக வேலைசெய்துகொண்டிரந்தாள்.குளிர்மையான இளப்பச்சைநிறத்தில் மேல்சட்டையுடன் கழுத்தோரம் சிறிதுவிலகி வெண்பழுப்புத்தோள்கள் தெரிந்தன.கழுத்தின் அசைவுளில் விலகிய தலைமயிரின் அசைவுகளில் வெட்டிவெட்டி மின்னிய வெண்நிறம் கண்ணைபறித்தது.நளினமாக அசைந்துகொண்டிருந்த விரல்களுடன் கண்கள் கணனித்திரையை மேய்ந்துகொண்டிருந்தன.தெலைதூரத்து நெல்வயல்களின்
நடுவேநிமிர்ந்து நிற்கும் ஒற்றைத்தென்னைமரம்போல சோகமாக கம்பீரமாக தெரிந்தாள்.கண்ணைத்திருப்புவதற்கு கடினமாகஇருந்தது.
முந்திய நாள் டிசைன்பண்ணிய கிளையன்ரின் டேட்டாபேசை சேவருக்கு அப்லோட் பண்ணியாக வேண்டும்.ஒரு அனுமதிமின்னஞ்சலை அமரிக்காவுக்கு சுட்டு விட்டு சுகமாக உட்கார்ந்திருந்தேன்.நிச்சயமாகத்தெரியும் அடுத்த இரண்டுமணிக்கு எந்த வேலையுமே எனக்கு கிடையாது.சோம்பலுடன் இணையத்தில் தமிழ் பக்கங்களை கூகிள் பண்ணிக்கொண்டும் மைக்றொசொவ்ட்டில் Nலைகிடைப்பதாய் பகல் கனவுகண்டுகொண்டுமிருந்தேன்.கறுப்பு பூசிய கண்ணாடி ஜன்னலுக்குவெளியே பதினொருமணிவெய்யில் சாம்பல் பூசியதுமாதிரி சோம்பலாகத் தெரிந்தது.கணனிகளின் விசிறிச்சத்தம் மட்டும் மெதுவாகக்காதைக்குடைகிறது.கணினித்திரைகளை வெறித்துப்பார்த்தபடி சுற்றிலும் மனிதர்கள்.யாரோ அவர்களை பயப்படுத்தி உட்காரவைத்ததுபோல வெறித்தகண்களுடன்உட்கார்ந்திருக்கிறார்கள்.ம்..ம்..பதினொருமணிவெய்யில் என்னுடைய பனித்துளிகள் எல்லாம் காய்ந்து போயிருக்கும்.
கணினித்திரைநடுங்கத்தொடங்கியது.கைத்தெலைபேசியைப்பார்த்தேன்.யாழ்பாணத்துநம்பர்.அம்மாவாத்தான் இருக்கும்.அம்மாதான்.சுற்றிலும் மனிதர்களை வைத்துக்கொண்டு போனில் பேசுவது எப்போதுமே எனக்கு பிடிக்காது.உண்மையில் சரியாக போன்பேசுவது ஒரு திறமை.எனக்கு கண்ணாமூச்சிகாட்டும் விஷயங்களில் இதுவும் ஒன்று.ஒன்று அதிகம் பேசுவேன்.இல்லாவிட்டால் பேசாமல்கேட்டுக்கொண்டிருப்பேன்.அம்மாவின் அழைப்புக்கள் பெரும்பாலும் எப்பொழுதும் ஒரேமாதிரியே தொடங்கம்.”தம்பி எப்படி இருக்கிறாய்..நீங்கள்சொல்லுங்கோ..நாங்கள் இருக்கிறமப்பு..சாப்பிட்டியே..இப்படித்தான் ஆரம்பிக்கும்.பொதுவாக எப்பொழுதும் முதலாவது கேள்வி சாப்பிட்டியா..என்பதாகத்தான் இருக்கும்.என்னுடைய பசியையெல்லாம் தான் அனுபவிப்பள் போல பலநாள் தண்ணிர்தாகம் தொண்டையை அடைப்பதுபோல கரகரக்கும் அம்மாவின் குரல் தெலைபேசிக்குள் ஒலிக்கும்.தொலைசியூடாக என்னை தழுவமுனைவது போல இயல்பான அம்மாவின் பேச்சு.இன்னும் ஏதாவது பேசிக்கொண்டே இருங்கோம்மா..என்று மனதுக்குள் சொலலிக்கொள்ளுவேன்.
குளிர்கால மார்களி.அமைதியான ஆறுமணி விடியற்காலை..ஊமையான ஒலிபெருக்கியுடன் மருதடிப்பிள்ளயாரின் பச்சைக்குளத்துக்கு முன்னால்தென்னோலை வேய்ந்த வீட்டில் புறாக்களின் சடசடப்பு.பனிக்குளிரில் துயிலெளும்பும் 1998 யாழ்பாணம்.
அம்மாவின் குரல் இவற்றையெல்லாம் தன்னுடன் கொண்டுவந்தது.காலமைமுதல் உள்ளுக்குள் பினைந்துகொண்டிருந்து வெறுமையும் ஏக்கமும் கண்முன்னே உருகி காணாமல்போவது போல உற்சாகமாக உணர்ந்தேன்.ஈரமும் பசுமையமான என்னுடைய வாழ்க்கை இன்னமும் எஞ்சியிருக்கிறது.அன்பும் அக்கறையுமான மனிதர்களுடன் சேர்ந்த என்னுடைய எனக்கே சொந்தமான வாழ்கையைஅந்தச்சில நிமிடங்களில்; அம்மாவின் ஆழ்ந்த கரகரப்பான குரல் எனக்கு நினைவுபடுத்திவிட்டுப்போனது.

அமரிக்காவிலிருந்து பதில் மின்னஞ்சல் வந்திருந்தது.றாகா.கொம்மில் இளையராஜாவைத்தேடிப்பிடித்து ஹெட்போனை மாட்டிக்கொண்டேன்.உயர்சாதி ஸ்ரீரியோ ஹெட்போனிலிருந்து“ஜனனி ஜனனி ஜகம்நீ அகம் நீ” பாட்டு சிலிர்த்து உதிர்ந்தது.மனதுக்குள் சந்தோஷமாக… இளம்பெண்ணின் குளிர்ந்த மெல்லிய விரல்கள் தலையின்முன்மயிரை கோதிவிடுவது போல உணர்ந்தேன்.அலுவலகமே வெளிச்சமாக சந்தொஷமாக மாறிவிட்டது போல.பக்கத்து மொனிட்டரில் தலையைப்புதைத்துக்கொண்டிருந்த அந்தப்பெண் என்னைப்பார்த்து
மெதுவாகச்சிரிந்தாள்.இரவில் நிலவின் மங்கிய வெளிச்சத்தில் வல்லை வெளியில் பரந்துகிடக்கும் காட்டுப்புற்களின் வாசம் போல இதமான மென்மையான மனதைத்தொடும் சிரிப்பு.

சசி.கிருஷ்ணமூர்த்தி சேரன்
மென்பொருள் வடிவமைப்பாளர்

Loops solutions - Social media marketing in Sri lanka