இளநீலம் பச்சை
இருள்கறுப்பு
கடல்நுரையின் வெண்மை
வண்ணங்கள் என்னை இழுக்கின்றன.
அவன் முணுமுணுத்தான்.
இவ்வண்ணக்கலப்புடன்
இணைந்து அதிரும் மென் டிஜிட்டல்
இசையில்
உலகின் உச்சசோகத்தை
உருவாக்க முடியும் என்று சொன்னான்
அடிவானத்தில் சேருவதாய்த்தெரியும்
தண்டவாளக்கோடுகளைநோக்கி
நம்பிக்கையுடன் நடக்கும்
குழந்தையின் ஏமாற்றத்தையும்
ஏ ஆர் ரகுமானின் காதல் தோல்வியையும்
தூரத்தில் தனிமையில் இசைக்கும்
சாகிர்உசைனின் ஒற்றைத் தபேலாவையும்
சேர்த்துக்கொள்
யோசனை சொன்னேன்.
நன்றியுடன் ஏற்றுக்கொண்டான்.
கைக்காய்ப்புக்களைத்தடவிப்பார்க்கும்
முதிர்ந்த உழைப்பாளியின்
இயலாமை..
முதிர்கன்னியின் பெருமூச்சுடன் கலந்த
இளவயதுக் காதல் நினைவுகள்
மகனின் சின்னவயதுக்குறும்புகளை
அவனுக்கே சொல்லும்
ஞாபகம்தொலைத்த முதிய தாய்..
விடியும் நேரம் மங்கத்தொடங்கும்
குருட்டுத்தெருவிளக்கு..
இன்னும் வேண்டும் சோகம் என்றான்.
அப்பிடியானால் சரி
ஊரடங்கிய யாழ்ப்பாணத்தின் பின்னிரவுகளில்
வைமன்வீதியால் ஊர்ந்துபோகும் -ஒற்றை
மோட்டார்வண்டியின் சத்தத்தையும்
சேர்த்துக்கொள்
நான் விலகிநடந்தேன்.
-சேரன்கிருஷ்