Tuesday, July 10, 2012

Surekha Yadav - Singapore


எனக்கு வயது இருபத்துஆறு. எனக்குக் கான்சர். இப்படித் தொடங்கிருந்தது அந்தப்பதிவு.

சிங்கப்பூரில் சைனாடவுனில் ஒரு வைத்தியசாலையின் மேல்மாடியில் ஒரு அறையில் இயங்கிக்கொண்டிருந்த அலுவலகம் ஒன்றில் முதல்முறையாக சுரேகாவைச்சந்தித்தேன். உள்ளுக்குள் நுளைந்ததும் நான்தான் 'சுரேகா" என்று கைகொடுத்தது பெண்.
 தலைமுடிஎதுவும் இல்லாமல் நான்குநாள் சவரம்செய்யாமல் இருக்கும் முடியுடன் ஒரு நாவல் நிற மினியில் பளபளக்கும் தொடைகள் தெரிய , ஏதோ பாரிஸ் இறக்குமதியோ என்று வியந்து கொண்டேன்.அந்த அலுவலகத்தில் நடப்பதற்கே இடம்கிடையாது. சுரேகா,சுரேகாவின் அண்ணன் இன்னும் இருவர் அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்தனர்.

இலங்கையில் இருக்கும் எனது அலுவலகம் சிங்கப்பூரில் இருக்கும் இவர்களுடன் எவ்வாறு இணைந்துவேலைசெய்வது என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.அந்த மினியுடன் சுரேகாவால் சரியாக கதிரையில் இருக்க முடியவில்லை.ஒரு கை உடையை சரிபண்ணிக்கொண்டே இருந்தது. ஒருமணித்தியால பேச்சுக்குப்பின் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டேன். அதன்பின் மூன்று நாட்கள் சிங்கப்பூரில் இருந்தும் அதன்பின் அவர்களை சந்திக்க எனக்கு வாய்க்கவில்லை.

மைக்றோசொவ்ட் சிங்கப்பூரில் எனக்கு ஒரு முக்கியமான அலுவலாக சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது இந்தப்பெண்ணை சந்தித்தேன்.சிலபேர் சில சொற்களை உச்சரிக்கும்போது வாய்அசைவும் உச்சரிக்கும் அழுத்தமும் அழகாக இருக்கும்.
இந்தப்பெண்ணிடம் அது நிறையஇருந்தது. பேசிக்கொண்டிருக்கும்போது எக்குத்தப்பாக எங்காவது பார்த்துவிடாமலிருக்கவும் சந்திப்புவிடயத்தில் கவனம் செலுத்தவும் நான் நிறையசிரமப்பட வேண்டியிருந்தது. சரியா ஒரு வாரத்தில் நான் இலங்கை திரும்பிவிட்டேன்.

இன்றைக்குவிடிய இரண்டு துண்டு பாண் பட்டர் ஒரு மைலோரீ தான் எனது காலை உணவு. பின்நேரம் பசிபொறுக்க முடியாமல் அலுவலகத்திற்கு கீழ் இருக்கும் கடையில் இரண்டு கிழங்குரொட்டியை விழுங்கிவிட்டு திரும்பவும் கொம்பியூட்டருடன் குந்திக்கொண்டேன்.
 "கோட்" எழுதுவதில் கவனம் போகவில்லை. போப்ஸ் மகசீன் இணையத்திற்கு எப்படியோ போய்ச்சேரந்தேன்.சுரேகாவின் பெயர் அதில் இருந்தது. அதில் இருந்த படத்தில் அதுதான் சுரோகா என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் படமும் பெயரும் எங்கோ பார்த்த ஞாபகம் வரவே தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். கிளிக்கி கிளிக்கி அது அந்த இணையத்துக்கு என்னை கொண்டுபோனது.

"நான் சுரேகா. வயது இருபத்தாறு. எனது பட்டப்படிப்பை இப்பொழுதுதான் முடித்திருந்தேன்.எனது குடும்பம் சிங்கப்பூரில் இருந்து பட்டமளிப்புவிழாவிற்கு அமெரிக்காவிற்கு வந்திருந்தது...."
இப்படி எழுதத்தொடங்கியிருந்தாள் சுரோகா. கான்சருக்கான சோதனை முடிவுக்காக மூன்றுமாதம் காத்திருந்த காலத்தின் நரகவேதனையை அந்தப்பதிவு சொல்லிக்கொண்டுபோனது. காருக்குள்ளும் குளியல்அறையிலும் வைத்தியசாலையிலும் தன்னை கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர்வடித்ததையும் அவள் அதில் குறிப்பிட்டிருந்தாள்.எனது நாட்கள் இன்னும் ஐந்து வருடமோ அல்லது பத்துவருடமோ என்று அந்தப்பதிவு முடிந்திருந்தது.

"கடவுளே கடவுளே.. என்று நான் சொல்லிக்கொண்டிருந்ததை ஒரு ஐந்தாறு செக்கனுக்கு பின்தான் என்னால் உணரமுடிந்தது. எச்சில் விழுங்கமுடியாமல் தொண்டை அடைத்து குப்பென்று கண்ணீர் பொங்கியது.

நான் பிறந்ததே இலங்கை இனப்பிரச்சனை உச்சம் பெற்றிருந்த காலத்தில் தான். மனிதச்சாவும் காணமல்போவதும் என்குப் புதிதல்ல. ஆனால் சுரேகாவை சந்திக்கும்போது எனக்கு அவளின் இந்தநோயைப்பற்றியொன்றும் தெரியாது. அவளுக்கு கான்சர் என்பது முதலில் அவளுக்கு தெரியும்போது எப்படி உணர்ந்திருப்பாளோ அதேபோலவே நானும் உணர்தேன்.
ஒரு பத்துநிமிடங்கள் இலக்கின்றி கணினித்திரையை மினிமைஸ் பண்ணுவதும் பெருப்பிப்பதுமாக , ஒரு கட்டுப்பாட்டில் என்னால் இருக்கமுடியவில்லை.
அவளுக்கும் எனக்கும் வயது ஒன்று என்பது அந்தப்பதிவிவைப்படித்த பின்தான் எனக்குத்தெரிந்தது.

ஷெகான் எனது தொழில் பங்குதாரி.அவனுக்கும் சுரோகாவை தெரியும் ஆனால் சந்தித்ததில்லை.
தொலைபேசியில் செஷகான் ஹலோ ஹலோ என, என்னால் மூக்கை மட்டுமே உறிங்சமுடிந்தது.பேசமுடியவில்லை. அவனுக்கு அந்த பதிவின் இணைப்பை மின்னங்சல் செய்துவிட்டேன்.

ஏன் இப்படி , ஏன் இப்படி என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். சுரோகா அழகாக இருந்தாள். என்னுடன் ஒரு கோப்பி குடிக்கும்படி கேட்டிருக்கலாமோ என்று சிங்கப்பூரின் அந்த அலுவலகத்தில் இருந்து இறங்கும்போது ஒரு மூன்றுதரமாவது என்னை நானே கேட்டுக்கொண்டிருப்பேன். ஏதோவொன்று அப்படி என்னை செய்விடவில்லை."பரிஸ் இறக்குமதி" என்ற என்னுடைய எக்குத்தப்பான கணிப்புத்தானோ என்னமோ. கான்சர் வைத்தியத்தில்தான் அவள் தலைமயிரை இழந்திருக்கிறாள் என தெரிந்தபோது என்னைநானே நொந்துகொள்வததை தவிர வேறேதுவும் தோன்றவில்லை.

 பூப்போல் இருக்கும் சுரோகா இன்னும் மலர்ந்தபடி இருப்பது ஒரு ஐந்து வருடங்களுக்குத்தான் என்று நினைக்கும்போது சோர்வும் கவலையும் என்னை மூடிக்கொள்கிறது.

நான் வெள்ளையாக உயரமாக ஒரு இத்தாலியனாக ,கித்தார் வாசிக்கத்தெரிந்தவனாக இருந்திருந்தால் ஒருவேளை எனக்கு சுரேகாவுடன் ஒருநாளை கழிக்கும் சந்தர்ப்பம் கிட்டியிருக்கலாம்.அவளைச்சிரிக்க வைக்கவும் வியாதியின் நினைவை மறக்கவைக்கவும் என்னால் முடிந்திருக்கலாம்.ஒருதொகை பூக்களாலும் உலகத்தின் மொத்த சந்தோஷத்தையும் அவளுக்கு அள்ளி வழங்கவும் என்னால் முடிந்திருக்கலாம்.

இந்த உலகத்தில் எங்கள் வாழ்கையில் எத்தனை பேiர்ச்ந்திக்கிறோம். ஒருகொஞ்ச நேரத்தில் ஒரு சந்திப்பு என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. இன்றுடன் இது இரண்டாவது நாள். முதல் படிக்கும் போது அவளது பதிவு எவ்வளவு துக்கத்தையும் கண்ணீரையும் தந்ததோ அதே அளவு மனஅழுத்தம் ஒவ்வொரு தடவையும் நெஞ்சுக்குள் புகுந்துகொள்கிறது.

Loops solutions - Social media marketing in Sri lanka