Monday, February 02, 2009

தம்பி என்னயும் சுட்டுப்போடு என்னால தாங்கேலாமக் கிடக்...கு

கரக் .. என்ற சப்தம் நிசப்தம் கிழித்தது.பிரிய மறுத்த இமைகள+டே சன்னமான வெளிச்சத்தில் நகர்ந்து முன்னேறியது முதலாவது உருவம்.
புரிந்துகொள்ள நேரம் ஆகவில்லை.ஆபாயம் என்றது அவனது மூளை.
நரம்பு முடிவுகளில் வேர்வை துளிர்த்தது.அசுர கதியில் இயக்கவேகத்தை அடைந்தது உடல்.
அவசரப்படாமல் ஜன்னலருகே பதுங்கியது இரண்டாவது உருவம்.
குளிரடித்தது போல நடுங்கியது உடம்பு.சிந்தனை செய்வதை மறந்து போனான்.போர்வை மூடியிருந்த உடம்புக்குள் துவண்டுபோய்க்கிடந்தன கைகள். தலைக்குநேரே மூச்சுக்காற்றின் சப்தம் உலுப்ப துள்ளிவிலகினான்.ஷசலன்சர் பூட்டாத துப்பாக்கி கிளப்பிய வெடியொலி ஊரை எழுப்பியது.தோள்மூட்டுக்குகீழ் ஊளைவு எடுத்தது.மெதுவான எரிவு மூட்டிலிருந்து பரவத்தொடங்கியது. குறிப்பில் இருட்டில் பாய்ந்தவனது கைளுக்கு கிடைத்தது சுட்டவனின் கழுத்து.பாயும்போது அவனை என்ன செய்வதென்று தெரியவில்லை.முழுஉடம்பின் பாரத்தாலும் அவன் அசைவைநிறுத்த முயன்றான்.இவன் சொன்னதை கேட்க மறுத்தது இடதுகை.ஊன்றிய நிலத்தில் இருந்து பெயர்ந்த கற்கள் முழங்கையை வளுந்தின. துலையைத்தூக்கி இரண்டாமவனை அடையாளம் காணமுயன்றான்;.பேய்க்காற்று பிடரியை உத்தியது.மெக்கானிக்ஷெட்டின் எண்ணைத்தரையில் சுவற மறுத்து கெட்டியாக தரையில் ஊர்ந்தது கருஞ்சிவப்புத்திரவம்.தன்னைச்சுட்ட சத்தம் கேட்குமுன்னே தலைசாய்ந்து இறந்து போனான் டும்பாச்சுரேஸ்.



சுரேசண்ணா புறா ஒண்டு தாறிங்களா? ஆப்பாவின் சைக்கிள் கரியரில் இருந்தவாறு சுரேசண்ணாவைப்பார்த்துக் கேட்டான் அவன்.அப்பாவுடன் இருக்கும்போது கேட்டால் சுரேசண்ணா தந்துவிடுவான் என்ற நினைப்பு அவனுக்கு.
‘போறுங்கோ தம்பி.புதுசா ஒண்டும் இறக்கேல்ல.இறக்கினவுடன ஈக்கிலடிச்சுப்போட்டுத்தாறன்’.அந்தா பாத்தீங்களே ‘பொஸ்கோப்பள்ளிக்குடத்துச்சீற்றில..’
அடுத்து உயரமான மூண்டுமாடிக்கட்டடத்தில் தெரிந்தன வெள்ளையும் மண்ணிறமுமான இரண்டு புறாக்கள்.
ஏன்ரதான் இரண்டும்.பொஸ்க்கோப்பள்ளிக்குடத்து முகட்டுக்குள்ளயே கூடுகட்டி இருக்குதுகள்.கூட்டுக்க வாறேல்ல.. தீனுக்கு மட்டும் வரும் ரெண்டும்.சுரேஸண்ணாவின் விசிலுக்கு அசைவைக்காட்டின புறாக்கள் இரண்டும்.
கூட்டுக்க குஞ்சொண்டும் பொரிக்கேல்லயே சுரேசண்ணா.
அதுக்குப்பதில் சொல்லாமல் அப்பாவுடன் கதைத்துக்கொண்டிருந்தார் சுரேசண்ணா.ஆட்வான்ஸ் லெவல்ல ஆட்ஸ் எடுத்தாச் சுகம் என்ன தம்பி.
இல்ல மாமா கொமேஸ் எடுக்கப்போறன்.
இதில நிக்கேக்க ஷேட்ஒண்டைப்போட்டுக்கொண்டு நில்லும் சுரேஸ்.கட்ட மதிலுக்கு மேலால் தெரிந்த மெல்லிய தோள்களில் தட்டினார் அப்பா.
புதிதாக முளைக்கத்தொடங்கிய மீசையுடன் பற்கள் தெரிய அழகாக சிரித்தார் சுரேசண்ணா.





இஞ்சேருங்கோ! சூமாரண்ண வந்திருக்கிறார்.
தம்பி சூமார்மாமா வந்திருக்கிறார் இருக்கச்சொல்லு வாறன்.ஈரவிறகு சவத்த புகைஞ்சுகொண்டே இருக்கு.பொசு;சுமட்ட வண்டில்காரன் போனா மறியடா தம்பி.இஞ்சேருங்கோ…
அப்பா கிணற்றடியில் இருந்து வருவது கேட்டது.கதிரைக்குள் புதைந்திருந்தார் சூமார் மாமா.வத்திப்போன மூங்கில் போல மெல்லிய உறுதியான உடம்பு.வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டையுடன் செருப்பை மறந்து பலகாலமான பித்தவெடிப்புக்கால்கள்.ஒன்றைத்தூக்கி ஒன்றுக்குமேல் போட்டுக்கொண்டு முன்காலை ஆட்டிக்கொண்டிருந்தார்.
அண்ண வாங்கோ.. - அப்பா சாக்கில் ஈரம் துடைத்தார்.
தம்பி சந்தப்பக்கம் போகேல்லயே..
வெளிக்கிடோணும் அண்ண.கிணத்தடி வாழ இரண்டுக்கும் கொஞ்சம் தண்ணி விடுவம் எண்டிட்டு..
எனக்கொரு இருநூறுருவா வேணும் தம்பி.
மனம் புண்படுவதைதவிர்க்கும் சிரிப்பு அப்பாவின் முகத்தில்.‘என்னட்டையும் இல்ல அண்ண.இருநூறு ருவா வெளியால வாங்கி வச்சிருக்கிறன் சந்தக்குப்போவம் எண்டிட்டு.நூறுருவாவை நீங்கள் கொண்டுபோங்கோ..’
பட்டடய விட்டாப்பிறகு இப்ப கொஞ்சம் கரச்சலா இருக்குத்தம்பி.இவன் சுரேஸ் எழும்புமட்டும் சாமாளிக்கத்தான் வேணும்.நான் வாறன்…
சூமார்மாமாவுடன் கேற்றுமட்டுக்கும் நடந்தார் அப்பா.





‘இந்தா ஒண்டுதான் தம்பி மிச்சம்’.சக்கரை கலந்த அரிசிமாரொட்டியை என்பக்கம் நகர்த்தின சுருங்கிப்போன இரண்டு கைகள்.வெட்டாத நகத்தில் இருந்த பழுப்பு நிறத்தை தாண்டி என்னை இழுத்தது ரொட்டியின் மணம்.
‘அன்ரி உங்கட வீடு கிடுகாலதானே மேஞ்சிருக்கொன்ன..ஒழுகிறேல்லயே. – அம்மா.
பதிஞ்ச வீடுதான பிள்ள. சீற்றுப்போட்டால் மனுசர் அவிஞ்செல்லோ செத்துப்போவினம்.மழைபெஞ்சால் முகட்டுக்கால கொஞ்சம் ஒழுகும்.குசினிதான் கொஞ்சம் ஈரம் கசியிது.பட்டடய விட்டாப்பிறகு அந்தச்சின்ன முத்தத்தில வெச்சுதான அந்தாள் வேலைசெய்யிறது.வீட்டிலை இப்ப கைவைக்கிறத யோசிக்கேலாது பிள்ள..
டும்பா இப்ப ஏஎல் எல்லோ அன்ரி செய்யிது..
ஓம்புள்ள.உந்த சான்ரிப்பள்ளிக்குடத்தில சேத்து அது படிக்கிறமாதிரித்தெரியேல்ல புறாத்தான் மேய்க்கிது.
அவன் வெளீல சுத்தாம வீட்டுக்க இருக்கிறதச் சொல்லாம நீங்கள்….
என்ன செய்யிறதண.இருக்கிறது ஒண்டே ஒண்டு. இவ்வளவு காலத்துக்குப்பிறகு பிறந்து எனக்கு ஒண்டும் முகத்துக்கு நேர சொல்ல ஏலுறேல்ல.உந்தப்பொடியங்களோட சேராத எண்டா கேக்கான். அந்தக்கறுவல் இயக்கப்பெடியனாம். இவனிட்டக்கேட்டா இல்ல என்டு சோல்லுறான்.உவனுக்கொண்டெண்டா நான் உயிரேட இருக்கன். மலையாள உச்சரிப்புடன் அந்த வயோதிகத்தொண்டை கரகரத்தது.கண்ணீர்ப்பளபளப்பை புறங்கை தேய்த்துக்கொண்டது.
சுரேஸ் அப்பிடியொண்டுக்கும் போகாது.நீங்கள் யோசிக்காதேங்கோ.உந்த வயசில எல்லாரும் இப்புடித்தான்.ஏங்கட பெரியதம்பி கேக்காத இயக்கப்பாட்டுக்களே..தகப்பன் அடிச்சாலும் அவன் இயக்கப்பாட்டுப்புத்தகங்கள கொண்டுதான் வாறான்.
ஆர் கொக்கான்ர மோனா..
ஓ.





பத்துநாள் லீவு என்னத்தை காணுமடா.. வருசக்கணக்கா அங்க இருந்திட்டு வாறது ஒரு கிழமை கூட எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமே..
ம்.. ஒரு மாதம் லீவெடுத்தா ‘ஓடு நாயே’ என்டு கலைச்சுவிடுவான்.பிறகு யாழ்ப்பாணத்தில வந்து புல்லுத்தான் புடுங்க வேணும்.விசர்க்கத கதைக்காதேங்கோம்மா…
யாழ்பாப்ணத்தில எல்லாரும் இஞ்ச புல்லுத்தானே புடுங்குகினம்.சூமாரண்ணேன்ர டும்பாச்சுரேசெல்லே வந்தது அண்டக்கு.சூமாரண்ண செத்துப்போச்சாம்.தாயும் இதுவும்தானாம்.நல்லா வளந்து பெரிய ஆம்பிளயாவிட்டுது.
உண்மையாவே.. என்ன செய்யிறாராம் சுரேசண்ணா..
வன்னீல மோட்டச்சயிக்கில் மெக்கானிக் கடையயொண்டு வச்சிருந்ததாம்.இப்ப உங்க ரெண்டாங்;குறுக்குத்தெருவில கடை ஒண்டு எடுத்து நடத்துதாம்.நல்லா ஓடுதெண்டு சொல்லிச்சுது.



சுமுது… எஸ்எம்எஸ்சீயில இருந்து ஐஎஸ்பிக்கு டெலிவர் பண்ணுப்பட்டிருக்கா எண்டு பார் இல்லாட்டி கீயுவில இருக்குதா எண்டு பார்.பைப்புகளும் கோடுகளும் சாட்டுகளுமாகவிருந்த மொனிட்டரை உத்துப்பார்த்துக்கொண்டே கதைத்துக்கொண்டிருந்தேன்.கைத்தெலைபேசி கிணுக்கியது.போறு என்று மற்றதை அமத்திவிட்டு கைத்தெலைபேசியுடன் ஜன்னல்பக்கம் நகர்ந்தேன்.

‘தம்பியே கதைக்கிறது..’ஓமம்மா சொல்லுங்கோ.

சுமாரண்ணேன்ர மகனயெல்லோ நேற்றுச்சுட்டுப்போட்டாங்கள்.

சுருங்கிப்போன கைகளுடனும் கண்ணீர்த்திரையிடும் முகத்தோடும் அந்தக்கிழத்தாயின் உருவம் கண்முன் தோன்றி மறைந்தது.’அவனுக்கு ஒண்டெண்டா நான் உயிரோட இருக்கமாட்டன்.’சோர்ந்துபோன உடலுடன் அருகிலிருந்த கதிரையில் இருந்துவிட்டேன்.

எப்பம்மா நடந்தது?

நேற்று இரவுதான்.கடேக்க படுத்திருக்கேக்க இரண்டு மூண்டுபேர் வந்து சுட்டிருந்கிறாங்கள்.நான் நெக்கிறன் வன்னியால வந்தாப்பிறகும் தொடர்புவச்சிருந்திருக்கிறான் போல..
தாய்க்குத்தெரியுமோம்மா?
ஆரோபோய்ச்சோன்னவங்களாம்.சண்டிலிப்பாயில இருந்து யாழ்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு அழுதழுது ஓடியேவந்ததாம் மனுசி. எரிச்சுப்போட்டு வந்தாப்பிறகு இரண்டுநாளயால ஒரு மத்தியானம் போல றோட்டில சென்றிக்கு நிண்ட ஆமிக்காரன்ர காலகட்டிப்புடிச்சுக்கொண்டு கேட்டுதாம்’தம்பி என்னயும் சுட்டுப்போடு என்னால தாங்கேலாமக் கிடக்கு’.

0 comments:

Loops solutions - Social media marketing in Sri lanka