Friday, August 31, 2007

அரவிந்தன் என்ற அரவிந்து

திலகம் எங்கயடி முத்தத்தில நின்ட நாய்க்குட்டியள் ஒண்டையும் காணேல்ல.தாய் நாய் அந்தரப்படுது?..அம்மம்மாவின் சத்தம் குசினி மட்டும் கேட்டது.நாய் ஜன்னலுக்கு கிட்ட வருவதும் மூக்கை காற்றில் உயர்த்தி காற்றை உறிஞ்சுவதுமாக நின்றது.அது ஓடியபோது கனத்து நின்ற அதன் முலைகள் இடமும் வலமும் அசைந்தாடின.மூலைக்கிணற்றில் தொபுக் என்று எதோ விழுந்த சத்தம் கேட்டு சாப்பிட்டு விட்டு அம்மாவுக்குத்தெரியாமல் வெய்யிலுக்க் தும்பி பிடித்துக்கொண்டிருந்த பாபு பிடிச்சதும்பிகளையும் விட்டு விட்டு கிணற்றைப்பார்க்க ஓடினான்.வாழைச்சருகை பிய்த்துக்கொண்டு ஒடிப்போய் கால்நுனிகளை ஊன்றிக்கொண்டு கிணற்றுக்குள் பார்த்தான்.சேட்போடாத மேலெல்லாம் மண்ணும் வாழைத்தும்பும் ஒட்டியிருந்தது.கிணற்றுக்குள்மூன்றுநாய்க்குட்டிகள் துடித்துக்கொண்டிருந்தன.

பெரியண்ணா நாலாவது குட்டியை இரண்டுவிரலால் தூக்கி அதன் முகத்தை உற்றுப்பார்த்தான்.அது கொஞ்சம் குண்டு நாய்க்குட்டி.வாலை காலுக்குள் இடுக்கி க்கும் க்கும் என்று அனுங்கிவாறு கண்ணை மூடித்திறந்தது.பெரியண்ணா தாங்கோ நான் போடுறன் என்றான் பாபு.துடித்துக்கொண்டிருந்த மூன்று குட்டிகளுக்கு மேல் போய் விழுந்தது குண்டு நாய்க்குட்டி.அந்த ஒன்றையாவது பாபுவால் காப்பாத்த முடியவில்லை.பெரியண்ணா துடித்துக்கொண்டிருந்த நாய்க்குட்டிகளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.பாபு எட்டிப்போய் கிணற்றுக்குள் துப்பி எச்சில் நாய்க்குட்டிகள் மேல் விழுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். அம்மம்மாவின் குரல் குசினிக்குள்கேட்டது.

எடியேய் திலகம்! இவன் நாய்க்குட்டியள கிணத்துக்க போடுறான் போல கிடக்கு பாரடி.இவனுக்கு பாவமெல்லே கிடைக்கப்போகுது.
தம்பி டேய்! அரவிந்து.நாய்குட்டியள் பாவமடாதம்பிகிணத்துக்க போடாத..


செத்துக்கொண்டிருந்த நாய்க்குட்டிகளையே இமைக்காமல் பார்தக்கொண்டிருந்தான் பெரியண்ணா.அரவிந்தண்ணா ஏன் நாய்குட்டியள கிணத்துக்க போட்டனீங்கள் ? பாபு மெதுவாகக்கேட்டான்.
பெரியண்ணாவுக்கு இருபது வயது.பாபுவின் அம்மா இல்லா நேரங்களில் றெஜீனாமாமிசொல்லுவா
"அவன் கொஞ்சம் மூளவளர்ச்சி குறைஞ்ச பிள்ளதானே.."
நிச்சயமாக இது பாபுவின்அம்மாவின் காதுகளில் விளாது என்று தெரிந்த பிறகுதான் மாமியின் வாய்திறக்கும்.
பாபு பிறக்கமுதல் அவன் அம்மாதான் பெரியண்ணாவைவளர்த்தவ.அம்மாவின் காதுக்கு இது கேட்டால் அவள் சும்மா இருக்கமாட்டா என்று பாபுவுக்குத்தெரியும்.இவற்றையெல்லாம் வாய்திறவாமல் கேட்டுக்கொண்டிருப்பான்..சில நேரங்களில பெரியண்ணா அவனைக்கட்டிப்பிடித்துக் கொஞ்சுவான்.

"பெரியண்ணா சீ உங்கட எச்சில் மணக்குது சென்ற் அடிச்சு விடு".இரண்டுகையாலும் கன்னத்தை மாறிமாறித்துடைத்துக்கொள்வான் பாபு.பெரியண்ணாவுக்கு உள்ளங்கைகள் இரண்டும் பெரியவை.மென்மையானவை.பாபு அவற்றை தடவிப்பார்த்துக்கொள்வான்.பெரியண்ணாவின் முதுகில் கொப்பளம் கொப்பளமாக காய்கள் இருக்கும்.அவனது உள்ளங்கைகளைப்போலவே அந்தக்காய்களும் தொடுவதற்கு மென்மையானவை அழுத்தமில்லாதவை.

ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியண்ணா வீடியோப்படங்களுடன் வருவான். சண்டைப்படங்களில் அவனுக்கு ஒரே மோகம்.ஒவ்வொரு சண்டைக்கும் "பாபு பார்த்தியே பாபு பார்த்தியே" பெரியண்ணாவின் குரல் இடைக்கிடை உசுப்பிக்கொண்டிருக்கும்.பாபு ரீவியையும் பெரியண்ணாவையும் மாறிமாறிப்பார்த்துக்கொண்டிருப்பான்.தீபாவளி பொங்கல்நேரங்களில் பாபுவும் பெரியண்ணாவும் சைக்கிள் வால்வுக்கட்டைகளில் வெடிசெய்வார்கள்.

இரபது வயதுப்பெரியண்ணாவும் பாபுவும் பெரியப்பா வரும்போது அவர் திடுக்கிடும் படி எப்படி வெடிஅடிப்பது என்று தீவிரமாகத்திட்டமிடுவார்கள்.பெரியண்ணாவின் எல்லாத்திட்டங்களும் கடைசிநேரம் மட்டும் நன்றாகவே வேலைசெய்தாலும் பெரியப்பாவின் கைகளால் கிடைக்கும் மாட்டு அடிகளுடனேயே அவை முடிவடைந்திருக்கின்றன..பாபு பெரியப்பாவின் பின்னால் ஒளித்துக்கொள்வான். பெரியண்ணா தோள்களுக்குள் ஒடுங்கிய தலையுடன் பரிதாபமா முணுமுணுப்பான்.பாபுவுக்கு அவனை தடவிக்கொடுக்கவேண்டும் போல் இருக்கும்.

ஆனால் பெரியப்பா கோபித்துக்கொண்டால்?
பெரியப்பா அங்கால போனதும் மெதுவாக பெரியண்ணாவின் கால்களைக் கட்டிக்கொள்வான்.அதிலேயே அவனது வலிஎல்லாம் சரியாகப்போகும் எனபது பாபுவின் எண்ணம். பெரியண்ணா கண்களில்இருந்து வழியும் கண்ணீரைத்துடைத்தபடி அம்மாவுக்கு இதைப்பற்றி புகார்சொல்ல மெதுவாக குசினிக்கு நடப்பான்.அவனது முதுகில் ஐந்தாறு கையின் அடையாளங்களாவது சிவப்பாக பதிந்திருக்கும்.

அன்று சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவு.பாபு விடியவே பெரியம்மாவீட்ட வந்துவிட்டான்.அங்க ஏற்கனவே சனமாக இருந்தது.சீலா மச்சாள் வந்திருந்தாள்.சீலா நல்ல வெள்ளை நிறம்.அவளைக்கிள்ளிப்பாரக்க வேண்டும் என்று பாபுவுக்கு நெடுக ஆசை.கொடுப்புக்குள் இருக்கும் தெற்றுப்பல்லு அவள் சிரிக்கும் போது மின்னி மறையும். விதம் விதமாக அழகாக உடுப்பு போடுவாள்.அவள் வந்து விட்டால் பெரியண்ணா பெரியமனுசனாகிவிடுவான். பாபுவைக்கண்டுகொள்ள மாட்டான்.

பாபு ஜன்னலில் ஏறிஇருந்து கொண்டு பால்குடித்தபடி ஒவ்வொருவரின் வாயையும் பார்த்துக்கொண்டிருந்தான்.சீலா சிரித்துச்சிரித்து பெரியம்மாவுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.பெரியண்ணா அவளுக்கு படம்போட்டுக்காட்டுவதற்காக ரீவியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்.

"தம்பி டேய' "

பெரியப்பாவின் குரல் பாத்ரூமிலிருந்து கேட்டது.பெரியம்மாவுக்குத்தெரியாமல் ஜன்னலுக்கு கீழே நின்ற எறும்புகளுக்கெல்லாம் பால் ஊற்றிக்கொண்டிருந்த பாபு திடுக்கிட்டுப்போனான்.தடக்குத் தடக்கென்று பெரியப்பா நடந்து வரும் சத்தம் கேட்டது.

"டேய் தம்பி கக்கூசுக்குப்போனாத் வடிவாத் தண்ணி ஊத்துறேல்யாடா? "
புளுத்த நாத்தம் நாறுது.மூதேசி உனக்கு எத்தின தரம் சொல்லுறது. உள்ளுக்க போகேலாமக் கிடக்கு"


பெரியண்ணா கூசிப்போனவனாய் நிமிர்நதான்;.சீலா மச்சாள் சிரித்துக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
சீலா எப்ப வந்தனி? .பெரியப்பா சீலாவுடன் கதைக்கத்தொடங்கினார்.பெரியண்ணா கையிலிருந்த படக்கொப்பியை புரட்டிப்பார்த்தான்.என்ன செய்யவேண்டுமென்பதை மறந்து விட்டவன் போல கையைத்தொங்கப்போட்டுக்கொண்டான்.

"டேய்"

-பெரியப்பா மறுபடியும் திரும்பினார்.பெரியண்ணா சாறத்தை மடித்துக்கட்டிக்கொண்டு பாத்ரூமைநோக்கி நடந்தான்.
"சீலா போகேக்க கற்பூரவள்ளி இலபுடுங்கித்தாறன்.அம்மாட்டக்குடுத்துவிடு.சூட்டுக்கு நல்லது.நீயும் விடியஎழும்பினவுடன தண்ணிகுடியடியப்பா.பிறகு பார்.."

பெரியப்பா தொடர்ந்துகொண்டிருந்தார்.
யாழ்பாபணத்தில் கரண்டில்லாத காலம் அது.தண்ணித்தொட்டிக்கெல்லாம் குழாய்கிணத்தில இருந்துதான் தண்ணிநிரப்பவேணும்.பெரியண்ணா இரைக்கஇரைக்க கிணத்திலதண்ணயடிப்பான்.பெரியப்பா குளிப்பார்.பெரியப்பாவின் மயிரடர்ந்த பெரிய கருப்பு முதுகு வெளிச்சத்தில் மினுங்கும்.பரபரவென்று சவர்க்காரம் தேய்த்துக்கொள்வார்.கால்நிகமெல்லாம் துப்பரவாக இருக்கவேண்டும் அவருக்கு.ஆறுதலாக அழுக்குத்தேய்துக்குளிக்க சூரியன் நடுவானத்துக்கு வந்து விடும்.பெரியண்ணா பின்னுக்கு கால்களை வளைத்துக்கொண்டு இடைக்கிடை ஓய்வெடுப்பான்.பிறகு பெரியப்பா சாப்பிடப்போய்விடுவார்.
"பாபு பார்த்தியே!அந்த முளியன் ஒருநாளும் தண்ணியடிச்சு விடமாட்டான்.இவர் பேயர் அவனைஒண்டும்சொல்ல மாட்டார்.இவர் பயமடா அவனுக்கு."
பெரியண்ணா கிசுகிசுப்பான்.அவன் முளியன் என்டு அன்பாகச்சொல்வது பெரியப்பாவின் இரண்டாவது மகன் கண்ணனைத்தான்.பெரியண்ணாவின் கோபத்திற்கு காரணம் இல்லாமலில்லை.முளியன் என்ற கண்ணன் நன்றாகப்படிப்பான்.தேவையில்லாமல் மற்றவருடன் கதைவைத்துக்கொள்ள மாட்டான்.பெரியப்பா அவனை வேலை ஒன்றும் செய்யச்சொல்லுவதில்லை.அவனை அதட்டிக்கூட பாபு பார்த்ததில்லை.பெரிண்ணாவுக்கு அவனிடம் பெறாமைதான்.அனால் கோபமில்லை.பெரியண்ணாவின் விளையாட்டுக்கள் எல்லை தாண்டும்போது அண்ணா என்ற கண்ணனின் அதட்டும்குரல் ஒன்றே அவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்..பெரியண்ணா அத்துடன் அடங்கிவிடுவான்.

எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது.திடீரென்று பெரியண்ணாவைக்காணவில்லை.
காணவில்லையென்றால் காணவில்லை.

ஊரெல்லாம் பச்சை சீருடை அணிந்தவர்கள் காவலுக்கு நின்றும் பெரியண்ணாவைக்காணவில்லை.பண்ணைக்கடற்கரையோரமாக மெல்லெனத்தவள்ந்து வந்த ஈரலிப்பான பருவப்பெயர்ச்சிக்காற்றுடன் கலந்து மறைந்து விட்டான் பெரியண்ணா.அப்பா எங்கெல்லாமோ ஒடினார்.பாபுவுக்கு முதல் ஒன்றும் தெரிய வில்லை.அப்பாவுடன் சேர்ந்து சைக்கிளில் சவாரிவிட்டான்.

"எப்ப நடந்தது "

அடங்கிப்போனவராய்க்கேட்டார் அப்பா.

"மத்தியானம் சாப்பாடெடுக்க வந்தவன்.ஆரிய குளத்தடியில வைச்சுப்புடிச்சிருக்கிறாங்கள் - நாளைக்கு பின்னேரம் மட்டும் பார்ப்பம்.இவனப்புடிச்சு என்ன செய்யப்போறாங்கள் போசு!!-அப்பாவையே உற்றுப்பார்த்துக்கொண்டு சொன்னார் பெரியப்பா.

அடுத்தநாள் வந்தது.அதற்கு அடுத்தநாளும் வந்தது. அடுத்த மாதமும் வந்தது.முகில் கறுத்து மழைபெய்தது.வயிற்றுக்காற்றையெல்லாம் வாயால் ஊதித்தள்ளும் அளவுக்கு வியர்த்துவடியும் கோடைக்காலம் வந்துபோனது. .பல்கிடுகிடுக்க மாசிப்பனி பொழிந்து தள்ளியது.இப்பொழுதும் முற்றத்து மாமரத்தில் இரட்டைவால்குருவி விடியற்காலத்தில் பாடும் சலசலப்புக்கேட்கிறது.எல்லாம் அந்தந்த இயல்பில் வழுவாமல் நடந்து கொண்டுதான் இருந்தது.பெரியண்ணா மட்டும் வரவில்லை.
டேய்தம்பி என்று கூப்பிட்டு பழகிய குரலுக்கு மற்றப்பெயர்கள் இணங்கவில்லை.தனக்கு நெருக்கமான அந்த பெயருக்குரியவன் இப்போது இல்லை என்று உணர்ந்துகொள்ள பெரியப்பாவுக்கு கொஞ்சக்காலம் பிடித்தது.

காருக்குள் நசுங்கியும் கடுவன்நாய்களிட்ட கடிவேண்டியும் நாய்க்குட்டிகள் தொலைந்துபோயின.பாபு பெரியம்மாவீட்டுக்கு போனால் தென்னம் மரங்களுக்கு கீழ்திரிந்துகொண்டிருப்பான்;.இடக்கிடை போய்கிணற்றை எட்டிப்பார்பான்.அவனுடையதும் பெரியண்ணாவினதும் சொத்துகளான வால்வுக்கட்டை வெடிகள் கவனிப்பாரற்று கிடந்தன.பெரியப்பா இரைக்க இரைக்க குழாய்கிணற்றில் தண்ணியிறைப்பார்.


ஒருகிழமை லீவில் கொழும்பிலிருந்து யாழ்பாணம் வந்திருந்தான் பாபு.பெரியம்மா வீடு வெளிக்கு அப்படியே தான் இருந்தது.அவ்வளவு பெரிய வீட்டில் பெரியம்மா மட்டும் குசினிக்குள்ஏதோ செய்து கொண்டிருந்தா.திரும்பும் போது பெரியம்மாவின் குரல் கேட்டது.தம்பி உந்த நாபிடிகாரர் வந்தா.உந்த குட்ட நாயைப்புடிச்சுக்குடுத்துவிடடா.பெரிய உபத்திரவமாக்கிடக்கு.பாபு ஒன்றும் சொல்லவில்லை. மெதுவாக நகர்ந்தான்.பெரியண்ணாவுக்கு பிடித்தமான வேலைகள் இவை...முற்றத்து விளாட்மரத்துக்குகீழே குருவிக்கூடென்று விழுந்து காற்றில் அலைந்தது.பாபுவுக்கு அழவேண்டும்போல் இருந்தது.

-சேரன் கிருஷ்ணமூர்த்தி

எனக்குப்பிடித்த கவிஞர் திருக்குமரனின் கவிதைத்தெகுப்பிலிருந்து மனதை உருக்கிய ஒரு கவிதை ஒத்திசைவாக


உனக்காகச்சாப்பிட்டு
உனக்காக முலைபெருத்து
உனக்காக உடையவனை
ஒதுக்கிவிட்டுச் சிலநேரம்
தனக்கான விருப்பங்கள்
தவிர்த்திருந்து கண்விழித்து
உட்பசலை படர்ந்திருப்பாள்

எண்ணெய்க்குள் தோய்த்தெடுத்து
இழுத்திழுத்துப் பிடித்துவைத்த
சின்னக் கூர்மூக்கு
சிரட்டைபோல் உருண்டதலை
அசையிலே அவள் நுள்ளும்
சதைபிடித்த பின்பக்கம்
கூசி நீ சிரக்க விரல்தடவும்கீழ் வயிறு

அடையாளம் தெரியாமல்
நீ புதைந்து போயிருக்க
கடைவாயில் பூவரசு
வைரவரில் பூவைத்து
உன்னை எதிர்பார்த்தபடி
உயிர்பிடித்துக்காத்திருப்பாள்
-நன்றி திருக்குமரன் கவிதைகள்

5 comments:

வி. ஜெ. சந்திரன் said...

சேரன் கடந்த வாரம் தான் உங்கள் வலைப்பதிவு என் கண்ணில் தட்டுப்பட்டது. மேலோட்டமாக பார்த்துவிட்டு சென்றுவிட்டேன். இன்று தான் உங்கள் மற்றும் சில பதிவுகளை படித்தேன்.

நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

cherankrish said...

Thank you :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தாசன் said...

நல்லாய் இருக்கு சேரன். ஆனால் இன்னும் கொஞ்சம் ஏதாவது செய்ய வேண்டும் எங்களை வாசிக்க வைப்பதற்கு. அருமையான விசயத்தை தொட்டு இருக்கின்றீர்கள். வரிகள் ஒன்றை ஒன்று செருகிக் கொண்டு நிற்கின்றன. அதனை எடுத்து விட்டீர்கள் என்றால் வாசிக்க சுலபமாக இருக்கும்.

cherankrish said...

<--நல்லாய் இருக்கு சேரன். ஆனால் இன்னும் கொஞ்சம் ஏதாவது செய்ய வேண்டும் எங்களை வாசிக்க வைப்பதற்கு -->

உண்மைதான்.
சரக்கிருந்தால் சந்தையில் போகும் என்றிருந்து விட்டேன் :)

Loops solutions - Social media marketing in Sri lanka