யாழ்ப்பாணக்குடும்பங்களில் ஒரு பழக்கமிருக்கிறது.ஒரு சின்னப்பிள்ளையிடம் "நீ என்னவாக வரப்போகிறாய் ? டோக்டராகவா அல்லது இன்ஜினியராகவா? " என்று தான் கேட்பார்கள்.மிகுதித்தெரிவு கிடையாது.பெற்றோரின் தெரிவு இந்த இரண்டு வகைகளுக்குமிடையே முற்றுப்பெற்று நிற்கிறது.அதற்குமேல் மிஞ்சிமிஞ்சிப்போனல் "பைலட்டாகவா" என்று இன்னும் அபந்தமான தெரிவைக்கொடுப்பார்கள்.பிள்ளைகளின் மனதில் இந்த இரண்டும்தான் சிறந்தவை மற்றவை எல்லாம் அவற்றிலும் பார்க்க குறைந்தவை என்ற உணர்வை தங்களை அறியாமலே ஏற்படுத்திவிடுகிறார்கள்.
இந்த உணர்சியுடனே வளரும் குழந்தைகள் சில துறைகளில் அவர்களுக்கு பிரத்தியேகமான திறமைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்கொணர்வதிலோ மெருகேற்றுவதிலோ கவனத்தை செலுத்துவதில்லை.சுவர்களில் சித்திரம் வரைவதிலோ துண்டு;ச்சீட்டில் கவிதை கிறுக்குவதிலோ நின்று விடுகிறார்கள். ஆனால் மனதில் தாங்கள் தெரிந்த பாடத்தைவிட இவற்றில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.கற்பனை வளம் கூடிய மாணவர்களால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது.பாடங்கள் விரிவுரைகள் அங்கால் நடக்க இவர்கள் தங்கள் கனவுலோகத்தில் மூழ்கியிருப்பார்கள்.பரீட்சை முடிவுகள் வந்ததும் “எனக்கு உது சரிவராதெண்டு சொன்னான் தானே? என்று மகனும் “உவனுக்கு ரீயூசனுக்கு காசைக்கொட்டின நேரம் நாலு தென்னம் பி;ள்ளை நட்டிருக்கலாம்.இவனுக்க என்ன குறைவச்சனான்..நாங்கள் சாப்பிடாமலெல்லா இவனை படிப்பிச்சனான்.” என்று தகப்பனும் பாட்டுக்கள் பாடுவர்.
இதெல்லாம் சரி தவறென்று வாதிடுவதற்கு முன்னர் பிள்ளைகளின் விடயங்களில் ஒரு அளவிற்கு மேல் தலையிடுவது எந்த அளவு சரியானது?தனது கனவுகளையோ அல்லது தான் முயன்று தோற்றுப்போனதையோ தனது சந்ததிகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளப்பார்ப்பது அருவருக்கத்தக்கதாயல்லோ இருக்கிறது.என்னுடைய பெரியப்பா ஒருவர் நான் வளரும் மட்டும் அவரிடம் நான் பார்த்தது இரண்டே இரண்டு காற்சட்டைகள் தான்.இப்பொழுதும் எனக்கு ஞாபம் இருக்கிறது அந்த முழங்காலில் வெளிறியதும் கிழிந்ததுமான டெனிம்.( இப்ப அதுதான் நாகரீகமாகப்போகிறதென்று அவருக்கு அப்பவே தெரிந்திருக்கிறது ) பிள்ளைகளை சயிக்கில் கரியரில் ஏற்றி இந்த யாழ்பாபண முடக்குகளில் உள்ள ரீய+சனக்கெல்லாம் கொண்டு திரிவார்.பையில் சாப்பாடும் சுடுதண்ணிப்போத்தலில் பாலும் கொண்டு வலு கரிசனையாக பிள்ளைகளுக்கு சாப்பாடுகொடுப்பார்.திரும்பவும் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு ரியூசனுக்கு வெளிக்கிடுவார். கணிதத்தில கொஞ்சம் புள்ளி குறைந்தால் அன்றைக்கு மாட்டடிதான்.இரத்த்தைச்சிந்திப்படிப்பிக்கிறன் என்று அடிக்கடி சொல்லுவார்.பெரியவனுக்கு இஞ்சினியராகவும் சிறியவனுக்கு டொக்டராகவும் இரண்டு தட்டுக்களை தன்னுள் வைத்திருந்தார்.உலகத்தில் உள்ள வாத்தியங்களை எல்லாம் பிள்ளைகளுக்கு பழக்கவேண்டுமென்ற அவாவில் திரிந்தார்.பின்னாளில் என்னவாயிற்று என்றால் பிள்ளைகள் அவருக்கு கிட்ட வரவே பயப்பட்டன.அவரில் இருந்து மனத்தளவில் தூரவிலகத்தொடங்கின.அவருக்குள் இருந்த உண்மையான தந்தைப்பாசத்தை இந்த போலியான நடவடிக்கைகளால் பிள்ளைகள் உணரத்தவறிவிட்டன.
கடைசிவரை பிள்ளைகளை அவர் சொந்தக்காலில் நிக்கவோ சுயமாகச்சிந்திக்கவோ விடவேயில்லை.அவருடை இளைய மகனுக்கு ட்றம்ஸ் வாசிப்பதில் அபாரமோகம்.இருப்பது கொழும்பில் பக்கத்துவீடுகள் எல்லாம் நெருக்கமாக இருக்கின்றதே என்று நினைக்காத அளவுக்கு ஒரு ட்றம்ஸ்செட்டை வாங்கி ஓங்கிக்குத்திக்கொண்டிருந்தான்.பெரியப்பா அவனை ஒஸ்ரேலியா அனுப்பினார் பட்டப்படிப்புக்காக.ஆனால் அங்கு அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.ட்றம்ஸ் சத்தத்துடனே அவனது காதுகள் நின்றுவிட்டன.பெரியப்பாவுக்கு இங்கு வட்டியும் பிறஷரும் ஏறியதுதான் மிச்சம்.தங்கள் முழவாழ்கையையும் பி;ள்ளைகளின் முழவாழ்கையையும் நாறடிக்கும் இந்தச்செயலைச்செய்ய அவர் சில காரணங்கள் வைத்திருந்தார்.ஓயாமல் இன்னொருவரின் பிள்ளையுடன் தன் பிள்ளைகளை ஒப்பிடுவார்.தன்பி;ள்ளைகள் டொக்டர் இஞ்சினியர் என்று சொல்லித்திரிவதற்காக என்ன செய்யவும் தயாராக இருந்தார்.அதேபோல் அவர்களும் தங்களது தோல்விகளுக்கெல்லாம் இவரையே கைகாட்டிவிட்டனர்.இத்தனைக்கும் பார்த்தால் அவரும் மனைவியும் சந்தோஷமாக இருந்ததில்லை.எல்லாம் பிள்ளைகளுக்கா என்று ஒரு கோடு கீறி ஏறிநின்றுவிட்டார்.
தனது வாழ்க்கைக்கும் தனது மற்றய சந்தோஷங்களுக்கு அர்தம் ஒன்றைக்கற்பிக்கவும் குற்ற உணர்வுகளில் இருந்து விடுபடவும் அவர் இந்த ‘இரத்தம்சிந்திப் படிப்பிப்பதை’ ஒரு காரணமாகக்கொண்டார்.சாதாரண வாழ்க்கை வாழ்கிறோமே என்ற குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காக ‘பிள்ளைகளை படிப்பித்தல் பயிற்றுவித்தல் ‘ என்ற போர்வையைப்போர்திக்கொண்டார்.அது அவருடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்தது அவருக்கு நிம்மதியை கொடுத்தது.அனால் அவரது பிள்ளைகள் கூடிய புள்ளிகள் எடுக்கும் போது பி;ள்ளைகளைவிட அதிகம் சந்தோஷப்பட்டார்.ஆனால் பிள்ளைகள் அப்படியிருக்கவில்லை.குறைய புள்ளிகள் எடுத்தால் மாட்டடியும் கூடிய புள்ளிகளில் தந்தையின் துள்ளிக்குதிப்பிலும் பிள்ளைகளுக்கு தங்களின் நிலை என்ன என்று புரிபடவில்லை.கூடியபுள்ளிகள் எடுக்கும் போது தந்தையின் மகிழ்ச்சியையும் குறைந்த புள்ளிகள் எடுக்கும் போது அதற்குகாரணமாக தந்தையையும் கைகாட்ட அவை பழகிக்கொண்டன.தானகப்படித்து அதில் குறைந்த புள்ளிகள் எடுக்கும் போது கிடைக்கும் மனவேதனையை பிள்ளைகள் உணர்ந்துகொள்ளவும் அவற்றை அடுத்தமுறை திருத்திக்கொள்வோமென்று பிள்ளைகளாக நினைக்கவுமான சந்தர்ப்பத்தை வழங்க அவர் தவறிவிட்டார்.
இது பிள்ளைகளின் படிப்பில் மட்டுமல்ல வேறுவிடயங்களிலும் நடக்கிறது.தந்தை பிள்ளை உறவில் மட்டுமல்ல அண்ணன் தங்கை அக்கா தங்கை அம்மா மகள் போன்ற ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் குடும்பச்சங்கிலிகளில் இதனை காணலாம்.தங்கையையோ தம்பியோ படிப்பதற்காக திருமணம் செய்யாமல் தாங்கள் படிக்காமல் இருப்பவர்ளை அடிமுட்டாள்கள் என்றுதான் சொல்லவேண்டும்.தான் பாழாவது மட்டுமில்லாமல் தேவையற்றமுறையில் அடுத்தவனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதும்தான் இதன் முடிவாக அமையுமே அல்லாது இதில் மற்றவருக்கு எந்த நன்மையும் இல்லை.
முனிதர்களில் ஒருவரை ஒருவர் அடிமைகொள்வது ஜீன்களில் படிந்திருக்கிறது.போர்கள் மட்டுமல்ல பணம் பதவி அன்பு ஆகியவைகளும் அவற்றில் அடக்கம்.மேல்சொன்னது அன்பால் அடிமைகொள்வது.இந்தப்பூமியில் நீங்கள் அனுபவிப்பதையெல்லாம் தானும் அனுபவிக்க எல்லாவற்றையும் தனது சொந்தப்புலன்களால் உணர்ந்துகொள்ள பிறந்தவர்களை உங்களுக்கேற்ற மாதிரி உங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கான தந்திரமான பிரயோகம்தான் இந்த அன்பினால் அடிமைகொள்தல்.சாதகமான ஒன்றை மற்றவர்களுக்கு அறியத்தரவிரும்பினால் மெல்லிய அறிவுரை போதுமானது.அதையும் மீறினால் அவர்கள் அதன் கெடுதியை அனுபவத்தால் தெரிந்து கொள்ளட்டும்.அது இதிலும் பார்க்க கெடுதியானதிலிருந்து தப்புவதற்கு அவர்களுக்கு உதவும்.இவற்றுக்கு நடுவே நீங்கள் புகுவதனால் வாழ்க்கை முழக்க அவர்களை தற்காக்க வேண்டிய பொறுப்பை நீங்களே தலைமேல் போட்டுக்கொள்கிறீர்கள்.எனது மகனுக்காக மகளுக்காக நான் இதைச்செய்வேன் எனது வாழ்க்கையை அர்பணிப்பேன் என்று மறைகழண்டவனாகப்புலம்பினால் அவர்களின் எல்லாத்துயரங்களுக்கும் இயலாமைகளுக்கும் தலைமைத்துவக்குறைவுக்கும் நீங்களே அத்திவாரம் போடுவீர்கள்.
பாவம் எனது பெரியப்பா கடைசிவரை அவர் அதனைப்புரிந்து கொள்ளவில்லை.போனமுறை நான் விடுமுறையில் போயிருந்தபோது பேருனுக்காக முங்கில் தடிவளைத்து பிரம்பு செய்துகொண்டிருந்தார்.
Attach your blog with www.yaaldevi.com and share it with friends by sms.
5 comments:
வழமையான பிரச்சினை...
வெளியில் இருந்து பார்க்குகும் போது சிறிய பிரச்சினையாக தோன்றும். ஆனால் உண்மையிலேயே பாரிய மன அழுத்தத்தை வழங்கக் கூடிய பிரச்சினை.
எம் நாட்டில் பெரியளவில் அறிவியலாளர்கள் வராமைக்கும் இந்தப் போக்குத் தான் காரணம்.
நல்ல பதிவு.
வணக்கம் சேரா !
மேற்கூறப்பட்ட உன்னுடைய கருத்துக்கள் யாவும் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்து வளர்ந்த எம்மை போன்ற இளையோருக்கு ஒன்றும் புதியவை அல்ல.
எந்த ஒரு பெற்றோரும் தனது பிள்ளை எதிர்காலத்திலே சிறந்த கல்வி மானாகவும் உலகம் போற்றுகின்ற ஒரு சிறந்தவனாகவும் விளங்க வேண்டும் என்பதையே ஓர் நோக்கமாக கொண்டவர்கள் . மனித குலத்தில் சிறப்பாக போற்றப்படும் பாத்திரமாக தாய் விளங்குகிறாள் . சின்ன வயசில் படித்த யாபகம், மாதா, பிதா, குரு, தெய்வம்.
மச்சான், இதனை நான் சந்திரமௌளியிடம் இருந்து கற்கவில்லை , உனக்கு நன்றாக தெரியும். நம்மை பெற்றெடுத்த தாய் எப்போது மகிழ்ச்சி அடைவாள் என்பது பற்றி திருவள்ளுவர் அழகாக சொல்லியிருப்பார்,
" ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய். "
இந்தவகையிலே தாய் தந்தையருடைய முக்கியத்துவம் இருப்பதுபோல் அவர்களால் பிள்ளைகள் படும் பிரதிகூலங்களும் இருக்கத்தான் செய்கிறது. இங்கே பெற்றோரை நான் குற்றம் சொல்ல வரவில்லை , ஆனால் அவர்கள் பிள்ளைகள் மீது உள்ள அன்பு, அக்கறை காரணமாக தமது அதிகாரத்தை தவறாக பிரயோகிக்க முற்படுகிறார்கள் .
தகப்பன் டாக்டர்ருக்கு படிக்க ஆசைப்படிருப்பார் ஆனால் அது நடந்திருக்காது ஆனால் அவருடைய பிள்ளை படிக்க போகும்பொது, மகனே அப்பாவால டாக்டர் ஆக முடியல நீயாவது டாக்டர் ஆகி எங்கட குடும்ப மரியாதையை காப்பற்றவேனும் என்று சொல்லுவார்.
மகன் சொல்லுவான் , அப்பா எனக்கு ஒரு லோயர் ஆகோணும் பூல ஆசையா இருக்கு அப்பா ! அதுக்கு அப்பா சொல்லுவார் , என்ன நீ லோயர் ஆக போறியோ , உனக்கு என்ன விசராடா. எங்கட ஊரில எதனை லோயர் மார் கோர்ட் கேஸ் எதுவுமே இல்லாமல் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டபடினம் தெரியுமே ; என்று கேட்டதும் அவநோட லோயர் கனவு முடிவுக்கு வரும். இப்படியே அவனுடைய ஒவொரு கனவுகளையும் சிதைத்து கடைசியில் அவனை டாக்டர் படிப்பிற்கு அனுப்புவர்கள் . அனால் வகுப்பறையில் அவனுடைய சிந்தனைகள் யாவும் தனது லாயர் கனவுகளுடனேயே கழியும் . அவனுடைய எதிகாலம் எப்படி அமையும் என்பது பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டிய
அவசியம் இங்கு தேவையில்லை ஏனெனில் சேரன் ஏற்கனவே தனது பெரியப்பாவினுடைய மகனிற்கு நடந்ததை கூறியிருந்தார்.
ஆகவே என் அன்பிற்குரிய பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை விருப்பத்திற்கு படிக்க வைப்பதை விடுத்தது அவர்களிடம் மறைந்து இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுங்கள் என்று கூறி உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன் .
சிறந்த ஒரு கருத்தை இங்கு தேர்வு செய்தமைக்கு சேரனுக்கு நன்றிகள் .
உங்கள் அன்பன்
கோபி
கோபி..
உங்கள் கூற்றில் உண்மை இருக்கிறது.சேரன் கூறியது போல எல்லாப்பொற்றோரும் தமது வாழ்கையை ஒரு பொருளுள்ளதாக மாற்றுவதற்காகத்தான் பிள்ளைகளை படிப்பிக்கிறார்கள் என்பது தவறு.இதை சேரன் இன்னமும் ஆழமாக பார்த்திருக்க வேண்டும் (ஆனால் நான் இதை ஒரு எழுந்தமானதாக எழுதப்பட்ட பதிவென்று கூறவில்லை.மிகவும் தரமான தனிமனித மனங்களின் உட்புறத்தை அலசியிருக்கும் பதிவு.).சரி பெற்றோர் தமது கனவை பிள்ளைகள் மேல் திணிக்கும் போது அவர்களால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கும் சந்தர்ப்பங்களில் அதற்கான மாற்று பிரதியீட்டு வழிகளை அவர்களுக்காக தெரிவுசெய்வதில் தவறிவிடுகிறார்கள்.பிள்ளைகளுக்கும் சுயமாக எந்த முடிவையும் எடுக்கத்தெரிவதில்லை(சேரன் சொன்னதுபோல் பெற்றோர் அதற்கான சந்தர்ப்பங்களை அவர்களுக்கு வழங்குவதில்லை).இதனால்தானோ பிளஸ்டு மற்றும் முக்கிய பரீட்சை முடிவுகள் வெளியான பிறகு ஆஸ்பத்திரி வார்ட்டுகள் நிரம்புகின்றன.
நண்பா உங்கள் பெயர் எனக்கு சரியாக தெரியவில்லை,
அடுத்த குறிப்பில் உங்கள் பெயரை மறக்காமல் தருவீர்கள் என நம்புகிறேன்.
பெற்றோர் ஆனவர் தனது பிள்ளை எப்படியான திறமை கொண்டிருக்கிறான் அவனுக்கு எந்த துறையில் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கலாம் என்பது பற்றி சிறந்த சிந்தனை கொண்டிருப்பதை விடுத்தது இவன் இதை தன படிக்க வேண்டும் இதை தான் செய்யவேண்டும் என்ற பிடிவாதத்தை விட்டு விட வேண்டும்.
மேற்க்கதேய கலாச்சாரத்தில் ஓர் இளம் பெண்ணோ இல்லை ஆணோ தனது உயர் படிப்பை தெரிவு செய்வதிலோ அல்லது வாழ்க்கை துணையை தேடுவதிலோ பெற்றோருடைய ஆதிக்கங்கள் செல்வாக்கு செலுத்தாத தன்மையை இங்கே பார்க்கவேண்டும்.
உங்கள் அன்பன்
கோபி
நண்பா உங்கள் பெயர் எனக்கு சரியாக தெரியவில்லை,
அடுத்த குறிப்பில் உங்கள் பெயரை மறக்காமல் தருவீர்கள் என நம்புகிறேன்.
பெற்றோர் ஆனவர் தனது பிள்ளை எப்படியான திறமை கொண்டிருக்கிறான் அவனுக்கு எந்த துறையில் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கலாம் என்பது பற்றி சிறந்த சிந்தனை கொண்டிருப்பதை விடுத்தது இவன் இதை தன படிக்க வேண்டும் இதை தான் செய்யவேண்டும் என்ற பிடிவாதத்தை விட்டு விட வேண்டும்.
மேற்க்கதேய கலாச்சாரத்தில் ஓர் இளம் பெண்ணோ இல்லை ஆணோ தனது உயர் படிப்பை தெரிவு செய்வதிலோ அல்லது வாழ்க்கை துணையை தேடுவதிலோ பெற்றோருடைய ஆதிக்கங்கள் செல்வாக்கு செலுத்தாத தன்மையை இங்கே பார்க்கவேண்டும்.
உங்கள் அன்பன்
கோபி
Post a Comment