சிலகாலத்துக்கு முந்தி
அது.
அப்பம்மா சாக முதல்
சந்திரிக்காவின் காலத்தில்
கொழும்பில் இருந்து
அப்பாவுடன் வந்திருந்தது.
இலைகள் எல்லாம்
பழுப்பாக உதிர்ந்தனவாம்
அந்தக்காலத்தில்..
சொல்லுவார்கள்.
எல்லோருக்கும் போதவில்லை
ஒரு அப்பிள்.
சின்னக்கீலமாக ஓன்றும்
அம்மா கடித்ததில்
பாதியுமாக
என்பங்கு கிடைத்தது.
கொழும்பில் இருந்து
யாழ்ப்பாணத்திற்கு பயணித்திருந்தது
அந்த
சின்னச் சிவப்பு அப்பிள்.
வெட்டவே மனமில்லை எனக்கு.
நீண்டதூரம் பயணித்திருந்தும்
கம்பீரமாய்ப் பளபளத்தது.
கிளாலிக்கடலில்
சூட்டுச்சத்தத்துக்கு பயந்து
அப்பாவின்
கால்சட்டைக்குள் ஒளித்துக்கொண்டதாம் அது.
அப்பாவின் தடவலில்
அதன்
காம்பு மடங்கி நிமிர்ந்தது….
அந்தச்சேற்றுக்காட்டுப்பாதைகளில்
எல்லாம்
நிலவுடன் பேசிக்கொண்டு
அப்பா நடக்கும்போது தன் அழகை
நிலவுடன் ஒப்பிட்டு
பீற்றிக்கொண்டதாம்.
தன்
சி;ன்ன மகனைப்பற்றி
அப்பாவின் பேச்சைக்கேட்டு
அமைதியான
வெள்ளைப்பனி கொட்டும்
தனது நாட்டைப்பற்றி
உச்சியில் தெரிந்த பராலைட்டை
உற்றுப்பார்தவாறு
ஏக்கமாக முணுமுணுத்ததாம் அப்பிள்.
தலைக்குமேல் கீச்சிட்ட
ஷெல்லி;ன் சிதறல்களிடம் தப்ப
தலைமேல் கைவைத்ததை
அதேபோல் நடித்துச்
சேட்டை செய்ததாம் அது.
தொண்டை வறண்டு
சொண்டுவெடித்த நேரங்களில்
அரோகராச்சொல்லி
உதவிசெய்ததாம் அந்த அப்பிள்.
தட்டிவானில்
சாவச்சேரி தாண்டும்போது
வானின் துள்ளலுக்கேற்ப
லயத்துடன் வந்த
அப்பிளின் பெருமூச்சு
காற்சட்டையில்
வெப்பமாக படிந்ததாக அப்பா சொன்னார்.
மிஞ்சிப்போன
அப்பிளின் காம்பை
புத்தம் ஒன்றினுள் வைத்தேன்.
நெடுங்காலம்
இந்த அப்பிளின் கதையை
மக்கள் சொல்லித்திரிவார்கள்
அப்பாவுக்கு நான்
உறுதி சொன்னேன்.
ஆதாரத்திற்கு
அந்தக் காம்பு இருந்தது என்னிடம்.
இரண்டுபக்கமும் அழுத்தப்பட்டு
சப்பையாய்ப்போய்..
ஆதாரத்திற்கு
அந்தக்காம்பு இருந்தது என்னிடம்.
-சேரன்கிருஷ்
6 comments:
ரொம்ப அருமை மகாராஜாவே! ம்..... கலக்கி அசத்துறீங்க! வாழ்த்துக்கள்!
ஏதோ ஒரு குறியீட்டை வைத்து எழுதியிருக்கின்றீர்கள் என்பது மட்டும் விளங்குகின்றது. சில பழைய ஞாபகங்கள் வந்துபோனது, ஆனாலும் உந்த அப்பிள் என்னவென்பது கண்டுபிடிக்கமுடியவில்லை.
//சின்னக்கீலமாக ஓன்றும் அம்மா கடித்ததில்பாதியுமாக என்பங்கு கிடைத்தது.//
அம்மாவோட பங்கு எங்கட வீட்ல தான் இப்டியாகுதுன்னு நினைச்சன். உங்கட வீட்லயும் இப்டித்தானா...
அருமையா இருக்கு சேரன்,, நா அப்பிள சொல்லல.. கவிதையைச் சொல்றன்
இடர்பாடுகளுடன் பயணித்து வந்த அப்பிள் தந்த சுவையை, இப்பொழுதெல்லாம் நான் வாங்கிச் செல்லும் அப்பிள்கள் தருவதில்லை. நல்லாயிருக்கு.
அருமையான படைப்பு சேரன்.. நான் 87-2003 இடைவெளியில் அப்பிளை கண்டதேயில்லை..
தங்கமுகுந்தன்,வந்தி,மருதமூரான்,புல்லட்,அமுதன்
பாராட்டுகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
யாழ்ப்பாணத்தில் பிறந்து எல்லோரின் வாழ்க்கையிலும் இதைப்போன்ற ஆயிரம் கதைகள் இருக்கலாம்.
Post a Comment