Sunday, September 05, 2010

பிராமணன்


பிராமணன்



யாழ்ப்பாணம் அப்ப இரண்டாயிரத்து மூன்றாம்' ஆண்டு.யாழ்பாணப்பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தைக் கடந்துவரும் பழைய ஒழுங்கையின் தொடக்கத்தில் இருந்த குறைச்சுவரில் குந்தியிருந்தோம்.ஆறுமணி சாதுவான கூதல் காத்து வீசிக்கொண்டிருந்தது.இருளத்தொடங்குவதற்கான ஆயத்தங்களை இயற்கை செய்யத்தொடங்கியிருந்தது.அப்பொழுதெல்லாம் பிளேன்ரீயும் கோளட்லீபும்தான் எங்களுடைய சிற்றுண்டிகள்.”கோள்லீபை அங்க வாங்குங்கோ பத்துறதுக்கு இங்க வாங்கோஎன்று எங்களை கடைக்காரர்கள் வரவேற்கும் அளவிற்கெல்லாம் நாங்கள் கோள்ட்லீபிற்கும் பிளேன்ரீக்கும் விசிறிகள் ஆகியிருந்தோம்.அப்போழுதும் குடித்திருந்த பிளேன்ரீயின் இனிப்பின்கொஞ்சம் அடிநாக்கில் புளிப்புச்சுவையுடன் ஒட்டிக்கொண்டிருந்தது.அவன் அப்பொழுது எங்களை கடந்து போனான்.அவனை நான் அங்கு கண்டிருக்கிறேன்.அவன் ஒரு ஐயர் பொடியன்.சிலவேளை அவன் எங்களை கடந்து போகும்பொழுது எங்களுடன் நிற்பவன் வேண்டுமென்றே அவனுக்கு எதாவது சொல்லுவான்.அவன் திரும்பியதே கிடையாது.
இடுப்பில் ஒரு வேஷ்டி தோளைச்சுற்றி ஒரு வேஷ்டி, நிதானமாக நடந்து எங்களை கடந்து போவான்.
டேய் அய்யா..
ஒரு நாள் நான் அவனைக்கூப்பிட்டேன். எங்களைச்சுற்றி பெரிது பெரிதாக எங்களுடைய மோட்டார்வண்டிகள் நின்றிருந்தன.
அவன் எனக்கு முன்னால் வந்து நின்றான்.
என்ன..
நானும் பாக்கிறன் நீ ஒரு எடுப்பாத்தான் திரியிறாய்
அண்ண நான் உங்களோட ஒண்டுக்கும் வரல்ல.சும்மா தனகாதேங்கோ
தனகினா என்னசெய்வாய் பூனாமோனே..
அண்ண நான் சும்மா போய்கொண்டிருந்தனான்
ஒவ்வொருநாளும் தானே போறோய்.என்ன செய்யப்போறனி இந்தநேரம்?
அது உங்களுக்கு சொன்னா விளங்காது..
.கேட்டதுக்கு பதில்சொல்றா..
அவன் நடந்து என்னைக்கடந்து வந்தான்.குண்டான எங்கள் சிவப்புநிற மோட்டார்சைக்கிள் ஒன்று சைட்ஸ்டாண்டில் நின்றிருந்தது.வேஷ்டியை கால்களுக்கிடையில் சுருக்கிக்கொண்டு இரண்டுகைகளையும் சீட்டில் ஊன்றி எக்கி உட்கார்ந்தான்.தோளைச்சுற்றியிருந்த சால்வையை விலக்கினான்.மிக நேர்த்தியான உடம்பு.
வெயிட்லிப்டிங்கில் ஷோல்டர்கட் என்று ஒன்று ஒரு முறை உள்ளது.தோள்மூட்டு வீங்கி உருண்டையாகி முழங்கைக்கும் தோளுக்குமிடையில் இருக்கும் கைப்பகுதி சப்பையாக இருக்கும்.அதே வாகில் இருந்து அவனது உடம்பு.இடுப்புக்குழைந்து நெஞ்சு இரண்டும் வட்ட வடிவமாக நெஞ்சுக்கு குறுக்கால் வெள்ளையாக குறுக்கோடியிருந்தது பூணூல்.யாழ்ப்பாணத்தில் வயதுவந்த ஜயர்மார் குடும்பி கட்டியிருப்பார்கள்.ஐயர் இளைஞர்கள் எல்லோரும் பெரும்பாலும் தலைமுடியை ஒட்ட வெட்டியிருப்பார்கள்.மற்றவர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி அறிவது கஷ்டமாக இருக்கும்.ஆனால் இவன் குடும்பி கட்டியிருந்தான்.வட்டமான முகம். மோட்டார் சைக்களின் சைட்பக்கமாக நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டிருந்தான்.இடதுகை மார்பில் இருந்த பூணூலை ஒழுங்குசெய்தது. இரவின் ஆரம்பமும் பகலின் முடிவும் சேரும் அந்த நேரத்தில் அவன் வாயிலிருந்து ருத்ரம் ஒலிக்த்தொடங்கியது.அவன் எங்களுக்கு கேட்கும் படி மெதுவாகச்சொல்லவில்லை.அடிவயிற்றில் இருந்து ஒலித்த ருத்ரத்தின் ஒலி கம்பீரமாக அந்த இடத்தை நிறைத்தது.எங்கள் ஒவ்வொருவராக உற்றுப்பார்த்துக்கொண்டே அவன் ருத்ரம் சொல்லிக்கொண்டிருந்தான்.
ருத்ரம் ஒவ்வொரு சொல்லாக பிசிறற்ற ஒலிச்செறிப்புடன் கம்பீரமாக அங்கு பொங்கிக்கொண்டிருந்தது.அவனுடைய திறந்த கம்பீரமான உடலும் பூணூலும் உடம்பில் இருந்த வெள்ளை உடையும் இருளும் ஒளியுமான அந்த நேரத்தில் மேலும் பிரகாசிக்கத்தொடங்கியது.ருத்ரத்தின் வசனம் முடியும் பொழுதும்என்று ஒரு அதிர்வுவரும்.சாதாரண நோரங்களில் அதைக்கவனிப்பதில்லை.அவன் ஒவ்வவொரு தடவை ருத்ரத்தின் வரியை முடிக்கம்பொழுதும் அந்த அதிர்வு எனக்கு ஏதோ செய்தது.உடம்பில் ஒரு குளிர் ஓடி கைமுடிகளெல்லாம் சிலிர்த்துக்கொண்டிருந்தன.அவனது கண்கள் ஈரமாக பளபளத்தன.கொஞ்சநேரத்தில் அவை தாமாக மூடிக்கொண்டன.நாங்கள் மரங்கள் மாதிரி அவனைச்சுற்றி நின்றுகொண்டிருந்தோம்.ருத்ரம் பொழிந்துகொண்டிருந்தது. நான் அவனுக்கு மனதில்ஐயன்என்று பெயரிட்டேன்.
திரு.ஜானகிராமனின்அம்மா வந்தாள்படித்திருக்கிறேன்.கதை என்னவென்றால் ஒரு மத்தியதரத்தைச்சேர்ந்த ஐயர்குடும்பம்.குடும்பத்தில் தாய் அழகானவள்.உயரமானவள்.அவள்வைத்ததே சட்டமாக இருக்கிறது.எப்படியோ அவளுக்கு இன்னுமொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது.அவளுக்கு தான் செய்வது தவறென்றும் தெரியும் ஆனால் திருத்திக்கொள்ள முடியவில்லை.அம்பி என்ற அவளது கடைசி மகனை வேதம் படிக்கச்செய்வதன் மூலம் தான்செய்த் தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடமுடியும் என்று நினைத்தாள்.இப்டியாக அம்பி வேதம் படிக்கத்தொடங்குகிறான்.பன்னிரெண்டு வருடங்கள் வேதம் படிக்கிறான் அம்பி.
கொழும்புக்கோவில்களில் கணபதிஹோமங்களின்பொழுது லலிதாசகஸ்ரநாமம்சொல்வார்கள். இடைக்கிடை ஐயர் நொக்கியாவை நோண்டுவார்.யார்போகிறார்கள் வருகிறார்கள் என்று அவரதுகண்கள் சுழன்றுகொண்டே இருக்கும்.சகஸ்ரநாமத்தின் அழகு அந்த உச்சரிப்பு இவர்களுக்கு வரவே வரதா என்று நினைக்கத்தோன்றும்.இருவர்சேர்ந்துசொல்லியும் அந்த அதிர்வும் தெளிவும் இருந்தது கிடையாது. இவர்களையெல்லாம் எழும்பு என்று சொல்லிவிட்டுஐயன்போன்ற ஒரு உயரமான உறுதியான பத்து பிராமண இளைஞர்களை வரிசையாக இருத்தி அந்தப்பத்துக்குரல்களின் வழிவரும் மந்திரங்களின் அதிர்வுகளை உணர்தால் எப்படிஇருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அச்சுப்பிசகாத தெளிந்த மந்திர உச்சரிப்புடன் பஞ்சகச்சம் கட்டி பூணூல் தரித்து தோளிலும் மார்பிலும் திருநீற்றுடன் உட்குழிந்த வயிறும் இறுகிய நிமிர்ந் உடலும் உயரமுமான பத்து பிராமண இளைஞர்களை நினைத்துப்பார்த்தேன்.எங்கள் சமூகத்துக்கு மிகவேண்டியதில் இதுவும் என்றென்றே தோன்றிது.
ராஜராஜசோழன் காலத்திலெல்லாம் இந்தியாவில் பிராமணர்களில் ஆதிக்கம் இருந்தது.”ராயர்கள்என்ற பெயருடன் போருக்கெல்லாம் தலைமைதாங்கியிருக்கிறார்கள் பிராமணர்கள்.சிவனை முன்னிறுத்தி சிவனுக்கு சேவைசெய்கிறோம் என்று தொடங்கிய பிராமண ஆதிக்கம் சிவனுடன் நின்றுவிடவில்லை.அது மக்களை கட்டுப்படுத்தியது , அரசுசெய்தது , படைநடாத்தியது.
இலங்கையில் அவ்வாறில்லை. பிராமண இனம் அதிகாரங்களை கொண்ட இனமாக இல்லை.அது எவ்வாறு கிழைத்தது எவ்வாறு வளர்ந்தது என்பதற்கான ஆதாரம் எனக்குக்கிடைக்கவில்லை.ஆனால் இலங்கையில் உள்ள பிராமணக்குடும்பங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் இந்தியாவுடன் தொடர்புபட்டிருக்கின்றன.
பிராமணன் மதிக்கப்படவேண்டியவன்.ஒரு ஜாதியாக அல்ல.பிராமணன் சாந்தமாக இருக்கக்கடப்பட்டவன்.தாவரங்களை உண்ணக்கடப்பட்டவன்.இரவும் பகலும் மந்திரங்களை மனனம் செய்யவும் தர்க்கிக்கவும் கடப்பட்டவன்.இரவும் பகலும் கோவிலின் வாசனையிலும் மணிகளின் ஒலியிலும் இரவின் இருட்டில் கோவிலின் கறுத்த மெனத்தில் ஒளிந்திருக்கும் தெய்வீகத்திலும் வாழக்கடப்பட்டவன்.சரியான பிராமணனைப்பெற்ற கோவில் முழுமைபெற்றிருக்கும்.சரியான கோவிலைப்பெற்ற மக்கள் ஒழுக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் முழுமைபெற்றிருப்பர்.சரியான மக்களைக்கொண்ட சமூகக்கட்டமைப்பு நாகரீகத்திலும் வாழ்க்கைமுறையிலும் முழுமைபெற்றிருக்கும். மந்திரம் சொல்வதை கம்பீரமாகவும் விருப்பத்துடனும் செய்யும் பிரமணனை நாங்கள் பெறவில்லை. மாறாக தன்னுடைய உடையைப்பற்றிய கேலிக்குப்பயந்தவனும் மந்திரங்கள் சரியாகத்தெரியாதவனும் தனக்கு மந்திரங்கள் சரியாகத்தெரியாததை மற்றவர்கள் கண்டுவிடுவார்கள் என்று எந்நேரமும் சஞ்சலத்தில் சுற்றும் கண்களைக்கொண்ட பிராமணையுமே நாங்கள் பெற்றிருக்கிறோம்.
திரதா யுகத்தின் முடிவில் எல்லாம் ஒரு புள்ளியில் வந்துவிடும் என்று ஐதீகம்.எல்லா ஜாதிகளும் ஒன்றாகிவிடும்.கறுப்பு வெள்ளை மண்ணிறம் சிறிய கண் சப்iயான மூக்கு சுருள் மயிர் என்ற எந்த பிரிவுகளும் கிடையாது.ஒரு குடும்பத்திலேயே இவையெல்லாம் தனித்தனி நபர்களிடம் காணப்படலாம்.அல்லது குடும்பம் என்ற கட்டுகள் உடைந்து மக்கள் எல்லாம் மந்தைகள் ஆகலாம்.அதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரியத்தொடங்கிவிட்டன.
வேதங்கள் பயிலப்படவேண்டும்.அவை பயிற்றுவிக்கப்டவேண்டும்.அதற்கான பாடசாலைகள் தனியாக ஆரம்பிக்கப்படவெண்டும்.ஆதிசங்கரன் அத்வைதத்தை ஆராய்ந்து விளக்கியதுபோல நாற்தவங்கள் நால்வேதங்கள் ஆராயப்படவேண்டும்.உண்மையான ஆர்வமுள்ளவன் வேதங்களினதும் மந்திரங்களினதும் மேன்மையுணர்ந்தவன் வழிப்படுத்தப்படவேண்டும்.காலம் கடந்தது சைவம்.ஜைனத்தையும் பௌத்தத்தையும் தத்துவங்களாக உள்வாங்கிவளர்ந்தது சைவம். வான்முகில் பெய்க , வளங்கள் சுரக்க ,முறையாக மன்னன் ஆட்சி செய்க,குறைவில்லாமல் உயிர்கள் வாழ்க, நான் மறைவேதங்கள் ஓங்குக ,
இவையெல்லாவற்றுடனும் சைவமும் தழைக்க என்று தானும் வளரர்ந்து உலகை வளர்த்த சைவத்தை பின்பற்றுவபர்கள் நாங்கள்.
வேதத்தின் மேன்மைகள் பரப்பப்படவேண்டும்.றிக்வேத சாகைகளின் பொருள்கள் நிகழ்காலத்தின் தன்மைகளுடன் ஒத்துப்போகும் வடிவத்தையும் அதமூலமான வளிகாட்டல்களும் மக்களுக்கு விளங்கவைக்கப்படவேண்டும். யசுரும் சாமமும் அதர்வணினதும் சாரங்கள் கோவில்களூடாகப் பரப்பப்டவேண்டும.இது கட்டாயம் நடக்க வேண்டும்.ஓம் தத் ஸத்.
………………………………………………………………………………………….
யாழ்ப்பாண்தில் வேதப்பாடசாலை அமைப்பதற்கான இந்துக்கலாச்சார அமைச்சையும் அரசாங்கத்தையும் தூண்டுவதற்கான ஆரம்ப நிலையின் தாக்கத்தில் எழுதப்பட்டது.



எம்மை ஒரு நேர்கோட்டிலே கொண்டுசெல்ல உதவுவதுதான் மதம்.அதற்கு மேலான மதம் பற்றிய சிலாகிப்பு எனக்கு இல்லை. ஆனால் மதங்கள் ஆழமானவை என்பதும் பல சமூகக்கட்டமைப்புகள் மதம்சார்தே உருவாகியிருக்கின்றன என்பதும் , அவை தனிமனித , சமூகமான மனித வாழ்;கையில் தனிப்பிரிக்க முடியாமல் பிணைந்துபோயிருக்கின்றன என்பதையும் நான் விளங்கிக்கொண்டிருக்கிறேன்.
மதம் இறைவனை அடையும் வழி என்றோ மேன்மைகளைப் பெற்றுத்தரும் என்பதை விட மதத்தைப்பின்பற்றும் மனிதர்களின் இணைப்பும் அந்த இணைப்பினால் கிடைக்கும் போதையும் தைரியமும் பாதுகாப்புணர்வும் மதத்திற்கான இருப்பை மேலும் ஊக்குவிக்கிறது. மதத்திற்கு கிடைக்கும் அவமானம் உடனடியாக அதனைப்பின்பற்றுபவர்களை பாதிக்கிறது. அவர்களை பிணைத்திருந்த பாதுகாப்பு பிம்பம் அசைத்துப்பார்க்ப்படுகிறது.
அந்த அவமானத்தில் இருந்து விடுபடும் வழிiயை உடனடியாக அறிந்துகொள்ளவும் ,எந்த உச்ச அளவிற்குபோனால் அந்த அவமானம் துடைக்கப்படும் என்பதை அறிந்துகொள்ள முடியாத கையாலாகதத்தனம் கோபத்தையும் வன்முறைiயும் குறுகியகாலத்தீர்வாக காண்பிக்கிறது.



-சேரன்கிருஷ்

--


5 comments:

Jana said...

அருமையான பதிவு. வேதபாடசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாக 2003ஆம் ஆண்டு பல திட்டங்கள் எடுக்கப்பட்டமையும், அதற்கான இடங்கள் கூட ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் ஊடகங்கள் வாயிலாக வாசித்த நினைவுகள் உள்ளன.

அப்போதைய இந்து கலாசார அமைச்சர் அமரர் மகேஸ்வரன் இதற்கான செயற்திட்டங்களை முனைப்பாக எடுத்தமையும் நினைவில் உள்ளது. தற்போது சமய விடயங்கள் யாவும் மேன்மைதங்கிய ஜனாதிபதிவசம் இருப்பதால் உரியவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து இந்த வேத பாடசாலை அமைவை உடனடியாக தொடங்கலாம்.

cherankrish said...

ஜனா,
அரசாங்கத்தை தூண்டியும்,எங்கள் அரசியில் வாதிகளுடாகவும் எப்படியோ இதைசெய்துவிடமுடியும்.ஆனால் படிப்பவனும் படிப்பிப்பவனும் தாங்கள் என்னசெய்கிறோம் என்றுதெரியாமல் செய்யும் இடமாக இது அமைந்துவிடக்கூடாது.

வேதம் பயில்வதற்குவேண்டிய அமைதியும் கடுமையான கட்டுப்பாடுகளும் குருகுலமுறையும் நிகழ்காலத்தில் எவ்வாறு சாத்தியம் என்பதும் எனக்கு விளங்கவில்லை.

சகலகட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு வேதம் பயின்றவனது வாழ்க்கை முறை ஊதியக்கொடுப்பனவு மற்றும் வசதிகள் என்பனவும் இந்தத்திட்டத்தில் ஆராயப்படவேண்டும் என்பதுதான் நான் வலியுறுத்துவது.இவ்வளவுகட்டுப்பாடுகளுடன் வேதங்கள் பயின்றவன் நாளை சமூகத்தை வழிநடாத்துபவன்.அவ்வாறு வழநாடாத்துவபனுக்கு ஏற்படும் மனஅழுத்தங்கள் அவன்பயின்ற வேதத்திலும் கட்டுப்பாடுகளிலும் கண்ணியத்திலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்? நிலைதளம்பாத அவனது நடாத்தையை உறுதிசெய்ய என்னசெய்யவேண்டும் என்பனவும் இதில் ஆராயப்படவேண்டும்.வேதம் பயின்ற பத்துப்பேர் எவ்வாறு இன்னும் நூறுபேரை அதே கண்ணியத்துடன் உருவாக்க உத்வேகமாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் இதில் ஆராயப்படவேண்டும்.

அப்படியில்லாமல் தொடங்கப்படும் வேதபாடசாலை அரசாங்கம் தொடங்கும் பல திட்டங்களைபோல பாதியிலே நிற்கவும் முழுமைபெறாமலும் போய்விடக்கூடும்.பகலில் வேதம் படித்துவிட்டு இரவில் 'செல்வியும்" "தங்கமானபுருஷனும்" பார்த்தால் எல்லாம் போச்ச்

Anonymous said...

Its nice

என்.கே.அஷோக்பரன் said...

//பிராமணன் மதிக்கப்படவேண்டியவன்.ஒரு ஜாதியாக அல்ல.பிராமணன் சாந்தமாக இருக்கக்கடப்பட்டவன்.தாவரங்களை உண்ணக்கடப்பட்டவன்.இரவும் பகலும் மந்திரங்களை மனனம் செய்யவும் தர்க்கிக்கவும் கடப்பட்டவன்.இரவும் பகலும் கோவிலின் வாசனையிலும் மணிகளின் ஒலியிலும் இரவின் இருட்டில் கோவிலின் கறுத்த மெனத்தில் ஒளிந்திருக்கும் தெய்வீகத்திலும் வாழக்கடப்பட்டவன்.சரியான பிராமணனைப்பெற்ற கோவில் முழுமைபெற்றிருக்கும்.சரியான கோவிலைப்பெற்ற மக்கள் ஒழுக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் முழுமைபெற்றிருப்பர்.சரியான மக்களைக்கொண்ட சமூகக்கட்டமைப்பு நாகரீகத்திலும் வாழ்க்கைமுறையிலும் முழுமைபெற்றிருக்கும். மந்திரம் சொல்வதை கம்பீரமாகவும் விருப்பத்துடனும் செய்யும் பிரமணனை நாங்கள் பெறவில்லை. மாறாக தன்னுடைய உடையைப்பற்றிய கேலிக்குப்பயந்தவனும் மந்திரங்கள் சரியாகத்தெரியாதவனும் தனக்கு மந்திரங்கள் சரியாகத்தெரியாததை மற்றவர்கள் கண்டுவிடுவார்கள் என்று எந்நேரமும் சஞ்சலத்தில் சுற்றும் கண்களைக்கொண்ட பிராமணையுமே நாங்கள் பெற்றிருக்கிறோம்.//

இதைப் புரிந்துகொள்ள பண்பட்ட மனம் வேண்டும்! பதிவு அருமை! வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

cherankrish said...

Thank you ம.தி.சுதா.

//என்.கே.அஷோக்பரன்
வாசித்தபுத்தகங்கள் எழுத்துக்களினால் ,நான் எழுதுவதில் முதிர்ச்சிதெரிகிறது போல இருக்கிறது.உண்மையில் எனக்கு பண்பட்ட மனம் உண்டு என்று பொய்சொல்லமுடியவில்லை :).

கூர்ந்து கவனிப்பதும் எனக்குள்ளே தர்க்கிப்பதும் , சரியை ஏன் சரியென்றும் பிழையை ஏன் பிழையென்றும் வேலைமெனக்கெட்டு மிகையாகயோசிப்பதும் இப்டிஎழுதவைக்கிறது என்று நினைக்கிறேன்.

Thank you for the comment Thambi.

Loops solutions - Social media marketing in Sri lanka