
வயலும் வரப்பும்
வகிடெடுத்து விரியும்-
வல்லை நிலத்தின்
எல்லை வெளிக்குள்
அமிளும் சூரியன்
எமக்கு மட்டும்
மண்சட்டியில் குத்தரிசிப்
பழஞ்சோறு-காலையில்
நிலங்களின் தலைகோதும்
சுதேசித் தமிழ் உழவனின்
உல்லாசப் புலம்பல்கள்
வியர்வை தளுவிக்கொண்டு.
நாற்றுவேர்களுக்கு காற்று
படுகிறது.
ஈரச்செம்புலம்... கால்பட
மேல் சிலிர்க்கிறது.
ஞாயிறு விடியல்
பளுப்புவெள்ளை
முத்தத்துப் பனங்கள்ளு
கூடிக்குமிந்து நிற்கும்
கொய்யாமரத்துநிழல்
கொஞ்சங் காரமாக
பங்குக்கிடாயிறைச்சி
முத்தத்துக் கொட்டுமண்
விளக்குமாற்றின் வரித்தடங்கள்
தொன்னைகள் கூடத்தோரணம்காட்டும்-இந்த
”அழகுசொல்லமுடியவில்லை”
கைகூவின் கருத்தேயறியாது…
கூத்துக்கூத்தென்று நாமும் கலைவளர்த்தோம்
எங்களுக்குள்ளும் கவிதைகள் வாழ்ந்தன.
எங்களோடு எங்களாய்
நாமே கவிதைகளாய்..
கதியால் சண்டைகளுடனும்
கவுண்ட மணியின் கதைகளுடனும்
காலம்கழிக்கும் மண்ணின் மூத்த
குடிகள்..
இன்றோ,
மட்கிப்போயிற்று எங்கள் கனவுக்காலம்
இன்னமும் கூட
எங்களுக்குள் உறங்கிப்போன
பணடைய தமிழனின்
எச்சங்களின் வாசத்தை
நான்- சிலநேரம்
கனவுகளில் உணர்ந்துகொள்கிறேன்
இலங்கையன் என்ற
இலக்கணம் துறந்து
தமிழனாய்த் தலைகுனியும்
சிலநேரம்
வேலிக்கதியால் முட்களுக் கிடையே
தொலைந்துபோன
இலங்கையனை..
கண்கள் தேடிக்கொண்டேயிருக்கிறது.
நண்பா
சிவப்பான உனது கண்கள்
கனவிலும் உன்னை வெறிக்கும்.
பல்கடிக்கும் சத்தமோ
எனக்குப் பயமாக உணர்கிறேன்.
நண்பா..
உனக்குத் தெரியுமா
உனக்குள் உறைந்து போனவை
உனக்குத் தெரியுமா
உனக்குள் மறக்கடிக்கப்பட்டவை
முற்றுத்து மல்லிகையின்
சின்ன வெள்ளைப்பூக்குளுக்குள்
வாசமொன்று கசியுமே
கொஞ்சம் ஈரலிப்பாக.
விரித்துக்கூடப்பார்க்காத
கவிதைப்புத்தகங்களின்
பேனாமை வாசங்கள்
மூச்சிளுக்கும் ஒவ்வொரு
தரமும் - மூளைசிலிர்க்கும்
உன்..
கண்கள் சொருகும்
இமைகள் திறவாதே.
கண்ணீர்த் துளிகள்
கதவுடைக்கும் நானறிவேன்.
நண்பா
நீ கொஞ்சம் நீயாகும் போது
நான்.
காதோரம் கொஞ்சம் கவிதை சொல்லவா??

0 comments:
Post a Comment